தனியார் நர்சரி பள்ளி மோகத்தால் மூடப்படும் அபாயத்தில் அங்கன்வாடி மையங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2015

தனியார் நர்சரி பள்ளி மோகத்தால் மூடப்படும் அபாயத்தில் அங்கன்வாடி மையங்கள்


பெற்றோர்களின் நர்சரி பள்ளி மோகத்தாலும், அரசின் அக்கறையின்மையாலும் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
மேலும்,குழந்தைகள் வருகை விகிதம் குறைவதால் ஆயிரக்கணக்கான முதன்மை மையங்கள், குறுமையமாக மாற்றப்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை அளிக்கும் இந்த மையங்களில் மொழிப்பயிற்சி, கதை, நடனம், பாடல், விளையாட்டு, சத்துணவு என அத்தனை அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.இங்கு 2 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை நகர்ப்புறங்களில் மட்டும் அதிகம் பரிச்சயமான ப்ளே ஸ்கூல், நர்சரி தனியார் பள்ளிகள் தற்போது கிராமந்தோறும் வந்துவிட்டன. தனியார் நர்சரி பள்ளிகளால் கவரப்படும் ஏழை, நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற பள்ளியில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய மாற்றத்தால் அங்க ன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவி சாவித்திரி, ‘குழந்தைகள் வராததைக் காரணம் காட்டி, தமிழகத்தில் இதுவரை 150-க்கும் அதிகமான மையங்கள் மூடப்பட்டுவிட்டன.4 ஆயிரத்து 386 மையங்கள் உதவியாளர் இல்லாத, குறு மையமாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 14 ஆயிரம் மையங்களில் பணிக்கு ஆட்களே இல்லை. இவற்றை அருகில் இருக்கும் மைய பணியாளர்களே சமாளிக்கும் நிலையில் உள்ளனர். இதே நிலை நீடித்தால் வரும் காலத்தில் இன்னும் ஏராளமான மையங்கள் மூடப்படும்அபாயம் உள்ளது. மக்களின் நர்சரி பள்ளி மோகமும், அரசின் அக்கறையின்மையுமே இந்நிலைக்கு காரணம்’ என குற்றம்சாட்டினார்.

இது ஒருபுறமிருக்க மையங்களின் தற்போதைய நிலை குறித்து திருச்சி சையது முர்துஷா பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி பணியாளர் கீதா கூறும்போது, “எங்கள் மையத்துக்கு பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்களின் குழந்தைகள்தான் வருகின்றனர். 2 வயது முதல் 4 வயதுடைய குழந்தைகள் என்பதால், அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவேன்.‘ஆடாமல் அசையாமல் உட்கார், நேராக பார்’ போன்ற ஆர்டர் வார்த்தைகள் இங்கில்லை. செய்கை பாடல், கதை, விளையாட்டு மூலம் கற்பிக்கப்படுகிறது.இதனால் அடுத்தநாள் உற்சாகமாக மையத்துக்கு குழந்தைகள் வருகிறார்கள்.

இத்தகைய ஆரோக்கியமான சூழலில் இருக்கும் அங்கன்வாடி மையத்துக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வர வேண்டும்’ என்றார்.சிலர் வறட்டு கவுரவத்துக்காக நர்சரி பள்ளியில் சேர்த்து ஃபீஸ் கட்டுவதில் தொடங்கி, யூனிஃபார்ம், புத்தகம், நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட செலவுகளுக்கு சிரமப்படுவதை பார்க்க முடிகிறது. முற்றிலும் இலவசமாக கிடைக்கும் அரசுப் பள்ளி தொடர்புடைய கட்டமைப்புகளை நடுத்தர வர்க்கத்தினர் தவிர்க்கின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி