கலை, அறிவியல் கல்லூரிகளில் முன்தயாரிப்பு பயிற்சி வகுப்பு ரத்து? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2015

கலை, அறிவியல் கல்லூரிகளில் முன்தயாரிப்பு பயிற்சி வகுப்பு ரத்து?

பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படுவதுபோல, கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த உயர் கல்விக்கான முன்தயாரிப்பு வகுப்பான"பிரிட்ஜ் கோர்ஸ்' ரத்து செய்யப்பட்டிருப்பதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் பல கல்லூரிகள் இந்தப் பயிற்சி வகுப்பை நடத்துவதற்காக மாணவர்சேர்க்கையின்போது,
ஜூன் 2-ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வருமாறு முதலாமாண்டு மாணவர்களை அறிவுறுத்தியிருந்தன. இந்த நிலையில் திட்டம் ரத்து செய்யப்பட்டதால், 2-ஆம் தேதி கல்லூரிக்கு வந்த மாணவர்களை பல கல்லூரிகளை ஜூன் 18-ஆம் தேதி வந்தால் போதும் என்று கூறி திருப்பியனுப்பியிருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
கிராமப்புறங்களிலிருந்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு, பொறியியல் படிப்பு குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தயாரிப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அண்ணா பல்கலைக்கழக அறிவுறுத்தலின் பேரில், அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இந்தத் தயாரிப்பு வகுப்புகள், முதலாமாண்டில் சேரும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.பொறியியல் படிப்புகள், பாடத் திட்டத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில்இந்தத் தயாரிப்பு வகுப்புகள் அமையும். இதில் பிளஸ் 2 கணிதம், இயற்பியல், ஆங்கிலப் பாடங்களும் நடத்தப்படும். இது மிகுந்த பயனளித்து வருகிறது. மாணவர்களிடையே நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கும் இதுபோன்று "பிரிட்ஜ் கோர்ஸ்' நடத்த உயர்கல்வித் துறை அண்மையில் முடிவு செய்தது. இது பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.கிராமப்புறங்களிலிருந்து ஆங்கிலப் புலமை இல்லாமல் கல்லூரியில் அடியெடுத்துவைக்கும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வகுப்பு புரிதலை ஏற்படுத்துவதற்கானவழிகாட்டியாக இருக்கும் என கல்லூரி பேராசிரியர்களும் கருத்து தெரிவித்தனர்.இதற்கிடையே, இந்தப் பயிற்சி வகுப்புக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறுந்தகடுகளும் சில கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதனால், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 18-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்தப் பயிற்சி வகுப்புக்காக முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 2-ஆம் தேதியன்றே முன்கூட்டியே கல்லூரிகளைத் திறக்க தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 2-ஆம் தேதியே கல்லூரி திறக்கப்படும் என்று அறிவுறுத்தின.ஆனால், ஜூன் 2-ஆம் தேதி வரை இதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்படாததால், அன்றைய தினம் கல்லூரிக்கு வந்த மாணவர்களை பல கல்லூரிகள், கல்லூரி வழக்கமாகத் தொடங்கப்படும் ஜூன் 18-ஆம் தேதி வந்தால் போதுமானது என்று கூறித் திருப்பியனுப்பியுள்ளன.இந்த நிலையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெற்ற அனைத்து அரசு கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்துவது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாததோடு, சில கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகடுகளை உடனடியாகத் திரும்பப் பெறவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதுகுறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கல்லூரி முதல்வர்கள் கூறியது:ஆலோசனைக் கூட்டத்தில் இந்தப் பயிற்சி வகுப்பு குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாததால், அதை நடத்துவதா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் எங்களிடையே இருந்தது.
இந்த நிலையில், எந்தெந்தக் கல்லூரிகளுக்கு இந்தக் குறுந்தகடுகள் அனுப்பப்பட்டதோ, அந்தக் கல்லூரி முதல்வர்களுக்கு மட்டும் குறுந்தகடுகளை திரும்ப அனுப்புமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயனுள்ள இந்த பயிற்சி வகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி