மாணவர் ஆர்வத்தைக் கருத்தில்கொண்டு, இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதற்கான ஆலோசனையை சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.பிளஸ் 2 முடித்தாலே பொறியியல் படிப்பில் சேர்வது என்ற நிலை மாறி, கடந்த2011 ஆம் ஆண்டு முதல் கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இது 2015-16 கல்வியாண்டிலும் தொடர்கிறது.நிகழ் கல்வியாண்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த முறை முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டதால், விண்ணப்ப விநியோகமும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.சென்னை காயிதேமில்லத் கல்லூரியில் சேர்க்கை பெற கடந்த 2014-15 கல்வியாண்டில் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை 14,300 பேர் விண்ணப்பித்திருந்தனர்.ராணி மேரி கல்லூரியில் கடந்த முறை 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தநிலையில், இந்தக் கல்வியாண்டில் 13,500 விண்ணப்பித்தனர்.
அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்லாது, பிரபல தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 3,000 முதல் 5,000 அளவுக்கு கூடுதலாக இருந்ததாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதிலும், வழக்கம்போல பி.காம். படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததாகவும் தெரிய வருகிறது.இதுபோன்று விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்போது, இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள கல்லூரிகள் அனுமதி கோருவது வழக்கம்.அதன்படி, நிகழ் கல்வியாண்டிலும் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி கூடுதல்மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள கல்லூரிகள் சென்னை பல்கலைக்கழகத்திடம் அனுமதி கோரியுள்ளன. இதற்கு அனுமதி அளிக்க பல்கலைக்கழகமும் இப்போது திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். தாண்டவன்"தினமணி'க்கு அளித்த பேட்டி:கலை, அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
இந்தப் படிப்புகளில் சேர இம்முறை விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.இதன் காரணமாக, சென்னையிலுள்ள பிரபல கல்லூரிகள் மட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளின் இடங்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்திக் கொள்ள அனுமதி கோரியுள்ளன.மாணவர்களின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகள் கேட்கும் இடங்களை உயர்த்திக்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்ட உடன், கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.
Good news for the poor students.
ReplyDelete