கும்பகோணம் பள்ளி தீ விபத்து11ம் ஆண்டு நினைவு நாளில் கதறல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2015

கும்பகோணம் பள்ளி தீ விபத்து11ம் ஆண்டு நினைவு நாளில் கதறல்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின், 11ம் ஆண்டு நினைவு தினமான நேற்று, குழந்தைகள் படத்தின் முன், மலர் வளையம் வைத்து, பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த, ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த, 2004ம் ஆண்டு,ஜூலை, 16ம் தேதி, கோர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 94 குழந்தைகள் தீயில் கருகி சாம்பலாயினர்.இந்த கொடும் சம்பவத்தின், 11ம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தீ விபத்து நடந்த பள்ளி முன், விபத்தில் இறந்த குழந்தைகளின் படத்துடன் கூடிய, 'டிஜிட்டல் போர்டு' வைத்து, பெற்றோர், உறவினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பெற்றோர், குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும், குழந்தைகளின் புகைப்படம் முன் வைத்தும், அவர்களை அடக்கம் செய்த இடத்துக்கு சென்று, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி வெங்கட்ராமன், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.எழுத முடியவில்லை!: தீ விபத்தில், படுகாயம் அடைந்த, 18க்கும் மேற்பட்ட குழந்தைகள், அரசு உதவியுடன், சென்னை, அப்ேபாலோ மருத்துவமனையில், உயர்தர பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், தீ விபத்தின் அடையாளம் அழியவில்லை.விபத்தில் பாதிக்கப்பட்டு, தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவி கவுசல்யா கூறியதாவது:விபத்தில், என் வலது கை முழுவதும் காயமடைந்தது. இதனால், என்னால் நீண்ட நேரம் எழுத முடியவில்லை. தொடர்ந்து, 10 நிமிடம் எழுதினாலே, கை வலிக்கிறது. விடை தெரிந்தும், தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.அரசு உதவவில்லை!: மாணவி மெர்சி ஏஞ்சல் மேரியின் தந்தை மரியநாதன் கூறுகையில், ''மகளுக்கு, கால்கள் மட்டுமல்லாமல், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. அதன் வடுக்கள், இப்போதும் உள்ளன. சிகிச்சைக்கு, அரசு எந்த உதவியும் அளிக்கவில்லை,'' என்றார்.வழக்கின் முடிவு!: பத்து ஆண்டுகளாக நடந்த வழக்கில், கடந்தாண்டு ஜூலை, 30ம் தேதி, தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம், கிருஷ்ணா பள்ளியின் நிறுவனர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை, தாளாளர் சரஸ்வதி, தலைமையாசிரியை சாந்தலட்சுமி உட்பட, எட்டு பேருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

குழந்தைகள் பாதுகாப்பு தினம்!:

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் நலச்சங்க செயலர் இன்பராஜ் கூறியதாவது:என் இரு மகன்கள் பிரவின்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோர், மூன்றாம் வகுப்பு படிக்கும் போது,தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இருவரையும் ஒரே நேரத்தில் நான் பறிகொடுத்தேன்.அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பர். அவர்களுடன் படித்தவர்கள், தற்போது கல்லூரிக்கு செல்லும் போது பார்த்தால், எங்களுக்கு துக்கம் தான் வருகிறது.ஜூலை, 16ம் தேதியை, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அன்றைய தினம், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி