வார்டு எல்லையை காரணம் காட்டி கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிகள்: ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பினால் நடவடிக்கை நிச்சயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2015

வார்டு எல்லையை காரணம் காட்டி கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிகள்: ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பினால் நடவடிக்கை நிச்சயம்

குடியிருக்கும் வார்டுக்கு உட்பட்ட வங்கிக் கிளையில் தான் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தட்டிக் கழிக்கும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் கலந்தாய் வுக்கு வரும் மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள வங்கிக் கவுன்ட்டர்கள் கண்துடைப்பானது என்று நேற்று முன்தினம் ‘தி இந்து’வில் வெளியான செய்தியை படித்துவிட்டு முன்னாள் வங்கியாளர்கள் சிலர் நம்மை தொடர்பு கொண்டு பேசினார்கள்.“கல்விக் கடன் வழங்க வங்கிகளுக்கு எல்லை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. வங்கிக் கணக்கு இருக்கும் வங்கி, வீட்டின் அருகில் அல்லது கல்வி நிறுவனம் இருக்கும் பகுதியில் உள்ள வங்கிகளில் கல்விக் கடன் கோரலாம் என ஏற்கெனவே அரசால் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதை மீறி, வங்கிகள் வார்டு எல்லை நிர்ணயிப்பது சட்ட விரோதம்.கல்விக் கடன் பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதற்கு வட்டாட்சியரின் வருமானச் சான்றே போதுமானது.

சம்பளச் சான்று உள்ளிட்ட வேறு ஆவணங்களை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது.ரூ.4 லட்சத்துக்கு உட்பட்ட கடனுக்கு பெற்றோரின் பிணை கையெழுத்து மட்டுமே போதுமானது. ரூ.7.5 லட்சம் வரையிலான கடனுக்கு மூன்றாம் நபர் பிணை கையெழுத்து தேவைப்படும். ரூ.7.5 லட்சத்துக்கு மேல், உள்நாட்டில் படிக்க ரூ.10 லட்சமும் வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் அதிகபட்சமாக கடன்பெறலாம். இதற்கு வங்கிகள் கோரும் சொத்துகளை ஈடாக வழங்க வேண்டும்.கல்விக் கடன் வழங்க குறைந்தபட்ச மதிப்பெண்னை வங்கிகள் நிர்ணயம் செய்ய முடியாது. மற்ற வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள கடனைக் காட்டியும் கல்விக் கடனை மறுக்கக் கூடாது. கல்விக் கடனுக்காக பெற்றோரின் சம்பளம் மற்றும் பென்ஷன் கணக்கில் அவர்களது அனுமதி இல்லாமல் பணத்தை பிடித்தம் செய்யக் கூடாது.முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தால் அடுத்த ஆண்டுக்கான கடன் தவணையை தர வங்கிகள் மறுக்க முடியாது. கல்விக் கடன் வழங்க 15-லிருந்து 30 நாட்கள் வரை மட்டுமே வங்கிகளுக்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு படிப்பு முடிந்து ஒரு வருட காலத்துக்குஅல்லது பணியில் சேர்ந்து ஆறு மாத காலத்துக்கு தவணை விடுப்பு காலமாக கருதப்படும்.அது வரைக்குமான வட்டி தொகையை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. அதன் பிறகு, ரூ.7.5 லட்சம் வரையிலான கடனை 120 மாதங்களிலும் அதற்கு மேற்பட்ட தொகைக்கான கடனை 180 மாதங்களிலும் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.இவை அனைத்துமே ரிசர்வ் வங்கியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள். இதை மீறி எந்த வங்கி செயல்பட்டாலும் அவர்களோடு மாணவர்கள் விவாதம் செய்யத் தேவையில்லை.

கடனுக்கான ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவர், ரிசர்வ் வங்கியின் சென்னைக் கிளை மற்றும் மும்பை தலைமையகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய இடங்களுக்கு பதிவு தபாலில் அனுப்பினால் போதும். பதினைந்தே நாளில் உங்களைத் தேடி வங்கி அதிகாரிகள் வந்துவிடுவார்கள்” என்று அவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

மேலும், “இந்தியன் வங்கிகள் சங்கத்தின் இந்த, ‘மாதிரி கடன் திட்டம்’ தவிர,அனைத்து வங்கிகளும் குறைவான வட்டியில் கடன் திட்டங்களை வைத்துள்ளன. ஆனால்,இதற்கு எந்தவித மானியமும் கிடையாது. குறிப்பிட்ட வரையறைக்கு மேல் கல்விக்கடன் தேவைப்படுபவர்கள் இந்தத் திட்டத்தில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கடனாக பெறலாம்.’’ என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி