கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2015

கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு?

தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்டவை காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாமல் இருப்பதால், அப்பணியிடங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகதகவல் பரவியுள்ளது.
கல்வி அலுவலகங்கள்தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேலாண்மை செய்யும் வகையில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில், கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் கல்வி மாவட்ட அளவில், உயர்நிலை கல்வி வரை, கண்காணிக்க, மாவட்டக்கல்வி அலுவலரும், வருவாய் மாவட்ட அளவில், அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொறுப்பாக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணிஇடங்களும் உள்ளனர்.மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்க பணிகளையும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரே கவனித்துவந்தனர்.இதனால், வேலைப்பளு அதிகரித்துள்ளதாக கோரிக்கை எழுந்த நிலையில், கூடுதல் மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.மாநிலத்தில் மேலும் 32முதன்மைக்கல்வி அலுவலர், பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இதனால்,64 பணியிடங்களாக அதிகரித்தது. இதில், ஓய்வு பெறுவோர் மற்றும் பதவி உயர்வு பெறுவோரின் பணியிடங்களை, அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம், நிரப்பப்பட்டு வந்தது.ஆனால், சமீப காலமாக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், நிதி ஒதுக்கீடு, ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.இதனால், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை, 'கலைக்க' முடிவு செய்துள்ளதாக, அலுவலர்களிடையே தகவல் பரவியுள்ளது.இதற்கேற்ப, நடப்பு கல்வியாண்டில், 10க்கும் மேற்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.வழக்கமாக கல்வியாண்டு துவக்கத்தில் வழங்கப்படும் பதவி உயர்வு, இப்போது வரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையை அடுத்த ஆண்டு வரை, கடைபிடிக்கும் பட்சத்தில், கூடுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை முற்றிலும் கலைக்கும் வகையில், எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், நடப்பு கல்வியாண்டில், சி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருந்த, மாவட்டக்கல்வி அலுவலர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், திட்ட நிதி ஒதுக்கீடும், வேலைப்பளுவும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், ஒரு மாவட்டத்தில், இரு சி.இ.ஓ.,க்கள் இருப்பதால், 'ஈகோ' காரணமாக பணிகள்பாதிக்கப்பட்டது. இதனால், இனி கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பப்போவதில்லைஎன்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாய்ப்பில்லை:

பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் விடும் போது, கூடுதல் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிடும். 64 ஆக உள்ள, சி.இ.ஓ., பணியிடங்களை, 32 ஆக குறைக்க முடிவு செய்யும் பட்சத்தில், அடுத்த ஆண்டு வரை, சி.இ.ஓ., பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 comments:

  1. ஒரு மாவட்டத்துக்கு ஒரு CEO போதாதா? இன்னும் ஒரு மாவட்டத்துக்கு கிழக்கு CEO, மேற்கு CEO, வடக்கு CEO மற்றும் தெற்கு CEO என்று போடாமல் இருந்தால் மிகவும் நல்லது......

    ReplyDelete
  2. கல்விதுறையில் வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு, வேலை வழங்குமாறு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

    மதுரை: வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு, வேலை வழங்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது தந்தை மீமீசல் அரசு மேனிலைப்பள்ளியில் உதவியாளராக பணியாற்றினார். பணியில் இருந்த போது 19.9.98ல் இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் எனக்கு வாரிசு வேலை கேட்டு 2000ம் ஆண்டில் என் தாயார் விண்ணப்பித்தார். என்னுடைய மற்றொரு சகோதரருக்கு மெரிட் அடிப்படையில் 2012ல் இடைநிலை ஆசிரியர் பணி கிடைத்தது. இதை காரணம் காட்டி எனக்கு வாரிசு வேலை தர முடியாது என அறந்தாங்கி டிஇஓ மறுத்து 2013ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். அரசு தரப்பீல் ஆஜரான வக்கீல் முகமது மைதீன், குடும்பத்தில் ஒருவர் அரசுப் பணியில் இருந்தால் வாரிசு வேலை கிடையாது என அரசாணை உள்ளதாக தெரிவித்தார். 

    மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘‘மனுதாரரின் தந்தை இறந்ததும் முறைப்படி உரிய காலத்தில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த விண்ணப்பத்தை நிலுவையில் வைத்துள்ளனர். மற்றொருவருக்கு மெரிட் அடிப்படையில்தான் வேலை கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் வேலை வழங்க முடியாது என்பதை ஏற்க முடியாது. மனு செய்தவுடன் அதை பரிசீலித்திருந்தால் அப்போதே வேலை கிடைத்திருக்கும். உரிய காலத்தில் பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது மறுப்பதை ஏற்க முடியாது. எனவே வேலை வழங்க மறுத்த டிஇஓ உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2 மாதத்திற்குள் மனுதாரருக்கு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி