100% தேர்ச்சிக்காக மாணவர்களை பள்ளிகள் கட்டாய தோல்வி அடையச் செய்கின்றனவா? அரசு பதிலளிக்க உத்தரவு: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2015

100% தேர்ச்சிக்காக மாணவர்களை பள்ளிகள் கட்டாய தோல்வி அடையச் செய்கின்றனவா? அரசு பதிலளிக்க உத்தரவு:

பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக ஒன்பதாம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களை கட்டாயமாக தோல்வியடையச் செய்வதாகக் கூறப்படும் புகார் குறித்து அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.


இதுதொடர்பாக மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள ஏ.தொட்டியபட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் தாக்கல் செய்த மனு விவரம்:


எனது மகன் சஞ்சய் கண்ணன் ஆலம்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 2014-15 ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தான். எனதுமகன் சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி அவனை 10-ஆம் வகுப்புக்கு அனுப்ப பள்ளி நிர்வாகம் மறுத்தது. அவனை 10-ஆம் வகுப்பில் சேர்த்தால் பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சி கிடைக்காது என்றும் கூறினர். இந்நிலையில், அவனை நடப்பு கல்வியாண்டில் மீண்டும் 9-ஆம் வகுப்பிலேயே படிக்கவைத்தனர். எனது மகனுடன் சங்கரபாண்டி என்ற மாணவரையும் அவ்வாறு 9-ஆம் வகுப்பிலேயே மீண்டும்படிக்கவைத்தனர். மேலும், இருவரையும் வகுப்புக்குள் அனுமதிக்காமல் வகுப்புக்கு வெளியே தனியே அமரவைத்தனர். இது இருவரது மனதையும் பாதித்தது. இந்நிலையில், இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் மரணத்துக்கும் பள்ளியின் 100 சதவீத தேர்ச்சி ஆசைதான் காரணம். எனவே, இருவரின் இழப்புக்கும் உரிய இழப்பீடு வழங்கிசம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்.


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை அடைவதற்காக, தோல்வி அடைந்துவிடுவர் எனக்கருதப்படும் மாணவர்களை அனுமதிக்க மறுக்கும் நிலை உள்ளது. எனவே அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இது குறித்து உரிய விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.இம்மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், மதுரை ஆட்சியர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி