பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2015

பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு

பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார்மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது.


இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது.


மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது.இனிவரும் காலங்களில் பள்ளிகளில், மாணவர்களுக்கிடையே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து வருவாய் துறை, போலீஸ் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடலுார், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி தாலுகாக்களில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று கடலுார், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது.கூட்டத்திற்கு, தலைமை தாங்கிய ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி பேசுகையில், 'நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பில் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், இன்றைய சூழலில் படிக்கும் பருவத்தில் மாணவர்கள் சாதிய அடிப்படையில் மோதலில் ஈடுபடுவது வேதனையாக உள்ளது. இதனை தவிர்க்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து மாணவர்களையும் உங்களால் முதல் மதிப்பெண் வாங்க வைக்க முடியாது.ஆனால், அனைவரையும் ஒழுக்கம் உள்ள மாணவராக மாற்ற முடியும். மாணவர்களை, மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாற்றாமல், நல்லொழுக்கத்தை கற்றுத் தாருங்கள்.தேர்ச்சியை விட ஒழுக்கமான சமுதாயமே நமக்கு அவசியம். மாணவ சமுதாயத்தை குறிப்பாக 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவர்களை வெளிப்புற தாக்கத்திலிருந்து அவர்களை காப்பாற்றி நல்வழிப்படுத்த வேண்டும். அதற்கு வாரம் ஒருமுறை நீதிபோதனை வகுப்பு நடத்த வேண்டும்' என்றார்.மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி பேசுகையில், 'பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாதம் ஒருமுறையேனும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, தங்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைத்து,மாணவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.


பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு சரியாக வராத மாணவர்கள் குறித்தும், பிரச்னை ஏற்படுத்தும் மாணவர்களை பற்றி அவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு சென்றுஎச்சரிக்கை விடுக்க வேண்டும். மொபைல் போன் பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது. மீறினால், அந்த மாணவரிடம் விளக்க கடிதம் பெற்றுக் கொண்டு, தற்காலிக நீக்கம் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் அடிக்க வேண்டாம்.ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் நடவடிக்கை எடுங்கள். அதற்கு முன்பாக பிரச்னைகுறித்து அந்த மாணவரின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மாதம் ஒருமுறையேனும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்துங்கள், மாணவர்களின் பெற்றோர்களை அவ்வப்போது அழைத்து, மாணவனின் செயல்பாடுகளை அவர்களுக்கு தெரிவிக்கும் வழக்கத்தை கொண்டு வந்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது.டி.எஸ்.பி., ராமமூர்த்தி பேசுகையில், 'பள்ளிகளில் மாணவர்களுக்குள் ஏற்படும் சிறு பிரச்னைகளே வெளியில் சமுதாய பிரச்னைகளாக மாறி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது.


இதில் பல பிரச்னைகள் வெளி நபர்களால் துாண்டி விடப்படுகிறது. இதனை ஆசிரியர்கள் கண்காணித்து தகவல் கொடுத்தால், பிரச்னையை துவக்கத்திலேயே கலையலாம்.தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள் பேசுகையில், 'மாணவர்கள் பள்ளி விட்டதும் உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும். ஆனால், போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் பல மணி நேரம் பஸ் நிறுத்தம், பஸ் நிலையங்களில் நிற்பதால்வெளிவட்டார ஆட்களுடன் தொடர்பு ஏற்பட்டு தேவையில்லாத சிக்கல்களை மாணவர்கள் உருவாக்குகின்றனர். இதனை தவிர்த்திட பள்ளி விடும் நேரங்களில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். பஸ்களில் கூட்ட நெரிசல் மற்றும் இடம் பிடிப்பதில் ஏற்படும் பிரச்னை காரணமாகவும் மாணவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.


கூட்ட நெரிசலை தவிர்த்திட பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என்றனர்.இதற்கு, போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் கலந்து பேசி கூடுதல் பஸ் இயக்கவும், நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்ல நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. கூட்டத்தில், தாசில்தார்கள் கடலுார் சிவா, பண்ருட்டி கீதா, குறிஞ்சிப்பாடி (பொறுப்பு) சிவக்குமார், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் தேவநாதன், வருவாய் ஆய்வாளர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி