இப்படியும் ஒரு மனிதர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2015

இப்படியும் ஒரு மனிதர்!

தாய்ப் பசு தன் கன்றுக்குப் பாலூட்டிய பிறகு, மீதமுள்ள பாலால் ஊர் மக்களுடைய குழந்தைகளுக்கு ஊட்டுகிறதே தவிர, தன் சந்ததியர்க்கு சேர்த்து வைப்பதில்லை.


 ஆனால், ஆறறிவு படைத்த மனிதன், பணத்தை பல தலைமுறைகளுக்குச் சேர்த்து வைக்கிறான். என்றாலும், இவர்களிலே ஒரு வித்தியாசமான மனிதர், நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி.

2014-ஆம் ஆண்டுக்குரிய நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்தி, மலாலா யூசுப் ஆகியோருக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது. அப்போது, நோபல் குழுவினர் சத்யார்த்திக்குத் தந்த தகுதியுரை என்ன தெரியுமா? பள்ளிக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகளைக் கூலி வேலைக்கு அமர்த்தும் கொடுமையை எதிர்த்து 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருவதற்காகவும், எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வி தர வேண்டும் என்று தொடர்ந்து பாடுபட்டு வருவதற்காகவும் என அமைகிறது அந்தத் தகுதியுரை.

சத்யார்த்தி நோபல் பரிசு பெற்றதில் எவ்வாறு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறதோ, அதே சிறப்பு, அப்பரிசுத் தொகையை அவர் பயன்படுத்திய விதத்திலும் இருக்கிறது. விருதுக்காகக் கொடுத்த பதக்கத்தைக் குடியரசுத் தலைவரிடம் சேர்த்துவிட்டார்.
அதை வீட்டிலே வைத்துக் கொள்ளாததற்கு அவர் சொன்ன காரணம், நமது புருவத்தை உயர்த்த வைக்கும். அந்தப் பதக்கம் என் வீட்டில் இருந்தால், என் ஊழியத்திலிருக்கும் கவனத்தை அது திசைதிருப்பிக் கொண்டேயிருக்கும்.
 விருதுக்குரிய பணம் எங்கே சென்றது தெரியுமா? கொத்தடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகத் தொடங்கப்பட்ட பால ஆஸ்ரமத்துக்கும், முக்தி ஆஸ்ரமத்துக்கும் அளிக்கப்பட்டுவிட்டது.

 மின்னியல் பொறியாளரான சத்யார்த்தி, கல்லூரிப் பேராசிரியர் பதவியைத் துறந்துவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணியில் தம் வாழ்வை அர்ப்பணித்தார்.
 மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபாலை அடுத்த விதிஷா எனும் சிற்றூரில் 11.1.1954-இல் பிறந்த சத்யார்த்தி, இளமைக் காலத்திலேயே தந்தையை இழந்த காரணத்தால், அரசுப் பள்ளியில்தான் படித்தார்.
தெரு விளக்கிலும், வீட்டுக்குள் சிம்னி விளக்கிலும்தான் படித்தார். வெகுகாலம் அவர் போற்றிக் காத்து வைத்திருந்த அந்த சிம்னி விளக்கைக்கூட, பிற்காலத்தில் நார்வே அருங்காட்சியகத்துக்குக் கொடுத்துவிட்டார்.

 விதிஷாவில் உள்ள பள்ளியில் படிக்கும்போது, ஒருநாள் பள்ளிக்கூடத்து வாசலில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி தன் மகனோடு உட்கார்ந்து செருப்புத் தைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அதனைக் கண்ட சத்யார்த்தி, நேரே தலைமையாசிரிடம் சென்று, அந்தப் பையன் பள்ளிக்கு வராமல் ஏன் செருப்புத் தைக்கிறார் எனக் கேட்டார். அதற்குத் தலைமையாசிரியர், "அவன் ஏழை. அவர்கள் அத்தொழிலைச் செய்வதுதான் வழக்கம். அவர்களுக்குப் படிப்பு வராது' என்றார்.

உடனே வெளியே வந்த சத்யார்த்தி, செருப்புத் தைக்கும் தந்தையைப் பார்த்து, "மகனை ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை?' என்று கேட்டார். அதற்கு அந்தத் தந்தை, "நான் அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. நாங்கள் இத்தொழிலுக்குத்தான் பிறந்திருக்கிறோம்' என்றார். அந்தப் பதில், சத்யார்த்தியைப் புரட்டிப் போட்டது.

அதனைக் கேட்டு, இது அநியாயம் என்று கத்தினார். இனி என் வாழ்நாளில் இப்படிப்பட்ட குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு, என் ஆயுளையே அர்ப்பணிப்பேன் என்று சூளுரைத்தார். இதுதான் அவர் இதயத்தில் விழுந்த முதல் விதை.

மற்றுமொரு சமூகக் கொடுமை, அவரைத் தலைக்குப்புறக் கவிழ்த்துப் போட்டது. 1969-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று, தீண்டாமையை அகற்றுவதற்கு ஒரு சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்தார். உள்ளூரிலுள்ள தலைவர்களைப் பார்த்து வேண்டியதால், அவர்களும் தவறாது கூட்டுச் சாப்பாட்டுக்கு வருவதாக வாக்களித்திருந்தனர்.
புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களைக் கொண்டே உணவினைத் தயாரிக்கச் சொன்னார்.

பூங்காவிலுள்ள காந்தி சிலையருகே அனைவரும் அமர்ந்து உண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், வாக்களித்த எந்தத் தலைவரும் வரவில்லை. எனினும், காந்தி சிலையருகே வந்து புறக்கணிக்கப்பட்ட மக்களோடு அமர்ந்து உணவருந்தினார்.

ஆனால், சத்யார்த்தியின் உறவினர்கள் சீண்டிய பாம்பென படமெடுத்து ஆடினர். இதற்குப் பரிகாரம் செய்யாவிட்டால், குடும்பத்தைவிட்டே (சாதிப் பிரஷ்டம்) நீக்கி வைப்பதாக அச்சுறுத்தினர். அதனைக் கேட்டுச் சிலிர்த்தெழுந்த சத்யார்த்தி, "எனது இயற்பெயர் கைலாஷ் நாராயண் சர்மா.
இப்பெயரில் பிராமணத்துவத்தைத் தாங்கி நிற்கிற நாராயண் சர்மாவைக் கழற்றி எறிகிறேன். இனி என்னுடைய பெயர் கைலாஷ் சத்யார்த்திதான்' எனப் பொதுமை பேசினார். சத்யார்த்தி என்பதற்குப் பொருள்: சத்தியத்தை ஆர்த்திப்பவன் அல்லது சத்தியம் விளம்பி என்பதாகும்.

அவரது மனைவி சுமத்ரா விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் மகள். செங்கல் சூளையிலும், கல் குவாரியிலும் கொத்தடிமைகளாகப் பெண் பிள்ளைகள் இருந்தால், அவர்களை மீட்கப் போகும் முற்றுகையில், சுமத்ரா முன்வரிசையில் நிற்பார். பால ஆஸ்ரமத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளைகளுக்கு அவர்தான் தாய் ஆசிரியை. அவரை ஆஸ்ரமத்துப் பிள்ளைகள் மாதாஜி என்றுதான் அழைப்பார்கள்.

சத்யார்த்தியினுடைய இயக்கத்தின் (save the childhood movement) நோக்கம்: 1) குழந்தைத் தொழிலாளர்கள் எங்கே இருக்கிறார்கள் எனக் கண்டறிவது, 2) அவர்களை அங்கிருந்து விடுவிப்பது, 3) அவர்களுக்குக் கல்வியைக் கொடுப்பது என்பன ஆகும்.

அவருடைய தாரக மந்திரம்: "இப்பொழுது இல்லை என்றால், எப்பொழுது? இதனை நீ செய்யாவிட்டால் வேறு யார் செய்வது?' என்பதாகும். இதுவரை 83,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, மறு வாழ்வு அளித்திருக்கிறார்.
ஏழ்மையிலும், வறுமையிலும் சிக்கிய பாமர மக்கள், குறிப்பாக பிகார், உத்தரகண்ட் மாநிலத்தில் வாழ்கிறவர்கள், பசி, பட்டினியால் தங்களுடைய குழந்தைகளை விற்கின்றனர். அப்படி விற்கப்படுகிற பிள்ளைகளில் 80 சதவீதம் தலித் மக்களாவர். குறைந்த விலைக்கு அக்குழந்தைகளை வாங்கிக் கொண்டு போகிற இடைத்தரகர்கள், அக்குழந்தைகளைச் சமூக விரோதிகளிடம் பன்மடங்கு அதிக விலைக்கு விற்றுவிடுவர்.
அந்தக் குழந்தைகளில் 11 வயதிலிருந்து 14 வயதுக்குள்பட்ட பெண் பிள்ளைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, ஒரு "மகாநதி'யையே ஓடச் செய்துவிடுவர். செங்கல் சூளையிலும், கல் குவாரியிலும் ஈடுபடுத்தப்படுகிற ஆண் பிள்ளைகளுக்குப் போதைப் பொருள்களை ஊட்டி, அவர்களை நிரந்தரக் கொத்தடிமை ஆக்கிவிடுவர். விற்கப்பட்ட குழந்தைகளின் உடலிலிருந்து சிறுநீரகங்களும், விலை போகும் உறுப்புகளும் களவாடப்படும்.
இந்த அநியாயத்தை ஒழிப்பதற்குச் சத்யார்த்தி, தம் சீடர்களோடு தொழிற்சாலைகளில் திடீர் சோதனையிடுவார். அதிகாலை எழுந்து சில தொழிற்கூடங்களில் நுழைந்து சத்யாக்கிரகம் செய்வார். இதனால், ஆத்திரம் அடைந்த முதலாளிகள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். என்றாலும், சத்யார்த்தி, "இந்தச் சமூகக் கொடுமையை ஒழிப்பதற்கு உயிர்த் தியாகம் செய்ய வேண்டுமானால், அதற்கும் தயார்' என்று பதிலளித்தார்.

சத்யார்த்தி எழுப்பிய அறைகூவலால், ஐ.நா.சபை, குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை மனித உரிமைக்குக் கீழே கொண்டு வந்தது. யுனெஸ்கோ இவரைத் தன்னுடைய உறுப்பினராக்கியது.
சத்யார்த்தியின் பரப்புரையால் 300 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளைத் தொழிலாளர்கள் ஆக்குவதில்லை என்று சபதம் செய்தனர். இந்திய அரசு விழிப்புணர்வு பெற்று, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், கூலி வேலைக்கு அனுப்புவதைக் குற்றவியலின் கீழ் 2012-இல் கொண்டு வந்தது.
இந்தியாவிலிருக்கும் 6 கோடி குழந்தைத் தொழிலாளர்களை விடுவிப்பேன் என்று சூளுரைத்த சத்யார்த்தி, 2,000 சமூகச் சேவகர்களோடு சர்வதேச அளவில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். 103 நாடுகளில் சுமார் 72 லட்சம் பேர் அவரது உரையை கேட்டனர். பல்வேறு நாடுகளில் 10,000 சமூக நிலையங்கள் நிறுவப்பட்டன.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பாய், தடுக்குப் பின்னுதல், தரை விரிப்புகள் (கார்பெட்ஸ்) தயாரிக்கும் சிறு தொழில்கள் புகழ் பெற்றவை. வட இந்தியாவில் மொத்தம் 3 லட்சம் பாய் பின்னும் தொழிற்சாலைகள் இருந்தன. இவற்றிலிருந்து அன்னிய நாட்டுச் செலாவணியாக 81.5 கோடி டாலர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. என்றாலும், இந்த லாபம் பெரும்பாலும் குழந்தைத் தொழிலாளர்களாலேயே கிட்டியது.

பாய் பின்னும் தொழிற்சாலை, தரை விரிப்பு தயாரிக்கும் தொழிற்சாலை முதலாளிகளிடம் சத்யார்த்தி தொடர்ந்து பேசினார். பெற்றோர்களிடம் பெரும் பிரசாரம் செய்தார். குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தாமல் தொழில் செய்ய முதலாளிகள் முன்வந்தனர்.
 அப்படித் தயாரிக்கும் விரிப்புகளில், இது குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தாமல் நெய்யப்பட்டது என முத்திரை பொறிக்கச் செய்தார். அப்படித் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு சிறந்த நெய்தல் (good weave) என்று நிரந்தரமாகப் பெயரிட்டார். இப்படி முத்திரை பொறிக்கப்பட்ட தயாரிப்புகள் தெற்காசியாவிலே சிறப்பாக விற்பனையாகின.

சத்யார்த்தி கடவுள் நம்பிக்கை உடையவர் என்றாலும், எந்தக் கோயிலுக்கும் போவதில்லை. அடிமைத்தனத்தில் முடங்கிக் கிடந்த சிறுவர் - சிறுமிகளை மீட்டுக் கொண்டு வரும்போது, அவர்களுடைய முகத்தில் தோன்றும் சுதந்திர ஒளிதான் தனக்குத் தெய்வ தரிசனம் என்றார்.

இங்கேயும் - இப்படி ஒரு மனிதரா?
கொத்தடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக தொடங்கப்பட்ட பால ஆஸ்ரமத்துக்கும், முக்தி ஆஸ்ரமத்துக்கும் விருதுக்குரிய பணம் அளிக்கப்பட்டுவிட்டது.

2 comments:

  1. This article has one important question for group 1. That is who has got Nobel Prize along with malala, in the year 2014?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி