பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2015

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும்!

தமிழகத்தை கல்வியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.இதற்காக முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கி வருகிறது. இருப்பினும்,மாநிலத்தில் மிகபழமையான கடலுார் மாவட்டம் தொடர்ந்து கல்வியில் பின்தங்கியே உள்ளது.கடந்த 2008-09ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 74.66 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்குக் கொண்டு செல்லும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த துவங்கினர்.இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளைப் போன்றே அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதோடு, மாதந்தோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில் மாநில பட்டியலில்24ம் இடத்திற்கு முன்னேறியது. இந்நிலையில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறைகாரணமாக அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீத பட்டியலில் கடலுார் மாவட்டம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2014-15 கல்விஆண்டில் 84.69 சதவீதம் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் 27ம் இடத் தில் உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு சாதனை மாணவர்களைப் பாராட்டிய கலெக்டர், இந்தாண்டு மாவட்டத்தை மாநில பட்டியலில் 10ம் இடத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படியே கல்வித்துறை அதிகாரிகளும், சிறப்பு வகுப்புகள், பருவத் தேர்வுகள் நடத்தி தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த கல்வியாண்டில் கடலுார் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 31 ஆயிரத்து 98 மாணவ, மாணவிகள் வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுத உள்ளனர் தனியார், மெட்ரிக் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் வரும் ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன இதற்காக, ஒவ்வொரு பாடத்திற்கும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன இந்நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

அதில், வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றதன் காரணமாக மாவட்டத்தில்60க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின. அந்த பணியிடங்களை நிரப்பிட மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் முக்கிய பாடங்கள் நடத்தப்படாமலேயே மாணவர்கள் காலாண்டு தேர்வு எழுதியுள்ளனர்.வசதியுள்ள மாணவர்கள் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பாடங்களுக்கு வெளியில் டியூஷன் படித்து வருகின்றனர். ஆனால், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் அதற்கும் வாய்ப்பு இல்லாமல் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால், வரும் பொதுத் தேர்வில் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவதன் மூலம், மாநில தரப்பட்டியலில் மாவட்டம் மேலும் பின்னுக்கு தள் ளப்படும் ஆபத்து நிலவி வருகிறது. இதனை தவிர்த்திட உடனடியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட மாவட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

12 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி