பி.எட். படிப்புக்கு விரைவில் புதிய கல்விக் கட்டணம்: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2015

பி.எட். படிப்புக்கு விரைவில் புதிய கல்விக் கட்டணம்: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றுஉயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 பிஎட் இடங்களுக்கு 7,425 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 1,113 பேர் பொறியியல் பட்டதாரிகள். பிஎட் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் தர வரிசைப் பட்டியல் 2 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.


இந்த நிலையில், கல்லூரியை தேர்வுசெய்வதற்கான ஒற்றைச்சாளர முறையிலான கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது.தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத்திறனாளிகள் புனிதா, பாலமுருகன், பிரியா, கலையரசி உள்ளிட்ட மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி கலந்தாய்வை தொடங்கிவைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:உயர் கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியின் பலனாக உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை 18 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 58 ஆண்டுகளாக தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்து வருகின்றன. தற்போது புதிதாக 5 பல்கலைக்கழக உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் பி.எட். படிப்பில் கூடுதலான மாணவ-மாணவிகள் சேர முடியும்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு சென்னை அருகே உள்ள காரப்பாக்கத்தில் ரூ.38 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் கூறினார்.கலந்தாய்வு தொடக்க நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ், இணை இயக்குநர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) பி.ஆர்.உமாராணி, தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அமைச்சர் பழனியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:


தற்போது பிஎட் படிப்புக்கு கல்விக் கட்டணமாக அரசுக் கல்லூரிகளில் ரூ.2 ஆயிரம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரம், தனியார் சுயநிதி கல்லூரிகளில் ரூ.41,500-ம், ‘நாக்’ அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ரூ.46,500-ம் வசூலிக்கப்படுகிறது.பிஎட் படிப்புக் காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒரே கல்விக்கட்டணம் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பிஎட் படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்குமாறு அதற்காக நியமிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணயக் குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது. கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


இன்று தொடங்கியுள்ள பிஎட் கலந்தாய்வு அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வின்போது காலியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தி இடங்கள் நிரப்பப்படும் என்று பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளர் பாரதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி