சபரிமலை மண்டலப் பூஜை நவ. 16-இல் தொடக்கம்: ஜனவரி 12 வரை தரிசனத்துக்கான முன்பதிவு செய்யலாம்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2015

சபரிமலை மண்டலப் பூஜை நவ. 16-இல் தொடக்கம்: ஜனவரி 12 வரை தரிசனத்துக்கான முன்பதிவு செய்யலாம்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, நவம்பர் 17 முதல் ஜனவரி 12 வரை தரிசனம் செய்ய விரும்புவோர் www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் இப்போதே முன்பதிவு செய்யலாம்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டலப் பூஜை, மகர விளக்கு பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி எடுத்து சென்று தரிசனம் செய்வது வழக்கம்.


இந்த ஆண்டு மண்டலப் பூஜைக்காக நவம்பர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27 வரை மண்டல பூஜை நடைபெறும்.அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு "அட்வான்ஸ் கியூ பிளேஸ்மெண்ட்' கூப்பன் எனும் கட்டணமில்லா இணையவழி முன்பதிவுத் திட்டம் 2011-இல் தொடங்கப்பட்டது. இது இந்த ஆண்டும் தொடருகிறது.இதன்படி, மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை முன்னிட்டு நவம்பர் 17 முதல் ஜனவரி 12 வரை தரிசனம் செய்ய விரும்புவோர் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பித்து முன்பதிவு செய்யலாம். முதல் கட்டமாக மண்டல பூஜை வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவை பெற்றுக் கொள்ளலாம்.


பின்பு, மகர விளக்கு பூஜைக்கு வருகை தரும் பக்தர்களும் முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டு, முன்பதிவு தொடங்கிய சில நாள்களில் இணையவழி தரிசனத்துக்கான கூப்பன் பெறுவது முடிவடைந்துவிட்டது.


எப்படி முன்பதிவு செய்வது?


பக்தர்கள் மேற்கண்ட இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். இதில், தங்களுடைய பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும்"வெர்ச்சுவல் கியூ கூப்பன் திட்ட இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.


முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய மார்பளவு புகைப்படம், ஏதாவது ஓர் அடையாள அட்டை, பதிவு செய்த பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பைக்குச் செல்ல வேண்டும். அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும்.அங்கு பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையைச் சோதனை செய்த பிறகு, பக்தர்களை பம்பாவில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதிப்பர். கூப்பனில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்பாகச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டாம் படியை ஏறி தரிசனம் செய்து விடலாம். திட்டம் நீட்டிக்கப்படும்:இந்த கூப்பன் வசதி மூலம் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை முன்பதிவு வசதியைப் பெறலாம்.


இந்தத் திட்டத்தின் மூலம், ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யலாம்.இதற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இந்தத் திட்டத்தின்படி, கடந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், தகவல்களை 0471- 3243000, 3244000, 3245000 ஆகிய அவசர உதவி எண்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி