தரத்தை உயர்த்த பேராசிரியர்களுக்கு தேர்வு: தனியார் பொறியியல் கல்லூரிகள் புதிய உத்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2015

தரத்தை உயர்த்த பேராசிரியர்களுக்கு தேர்வு: தனியார் பொறியியல் கல்லூரிகள் புதிய உத்தி

மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து கல்வித் தரத்தை உயர்த்தவும், திறன்குறைந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து நீக்கவும் புதிய உத்திகளை தனியார் பொறியியல் கல்லூரிகள் கையாளத் தொடங்கியுள்ளன.தேர்வுகள் மூலம் பேராசிரியர்களின் திறனைக் கண்டறிவது, அதன் மூலம் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை சில பொறியியல் கல்லூரிகள் இப்போதே தொடங்கியுள்ளன.


தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கலை, அறிவியல் பட்டப் படிப்புகள் மீதேமாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பொறியியல் படிப்புகளிலோ சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக பி.இ. தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் போன்ற பிரிவுகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக்குறைந்து வருகிறது.கடந்த 2014-15 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பி.இ. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 5,262 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 13,987 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவில் 19,012 இடங்கள் மட்டுமே நிரம்பின. இந்த மூன்று பிரிவுகளிலும் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை.தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதே நிலை நீடித்ததால் 2014-15 கல்வியாண்டில் 3 பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. 33 பொறியியல் கல்லூரிகளில் படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டன.இந்த நிலையில், 2014-15-ஆம் ஆண்டிலும் இதே நிலை நீடித்தது. 2015-16 கல்வியாண்டு ஒற்றைச் சாளர கலந்தாய்வு முடிவில் பி.இ. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 5,648 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 15,056 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவில் 18,707 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. இம்முறையும் இந்த 3 துறைகளிலும் 55 சதவீதத்துக்குமேல் இடங்கள் நிரம்பவில்லை. மேலும் ஒட்டுமொத்த துறைகளைப் பொருத்தவரை, 33 கல்லூரிகளில் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள்கூட நிரம்பவில்லை. பிரபல கல்லூரிகளிலும் சேர்க்கை குறைந்தது.இதன் காரணமாக, கல்வித் தரத்தை உயர்த்துவது, ஆள்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை சில தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்கியுள்ளன.அதிலும் சில கல்லூரிகள் சிறப்புத் தேர்வு மூலம் பேராசிரியர்களைத் தரம் பிரித்து, ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டுள்ளன.


இதுகுறித்து சென்னைக்கு அருகே உள்ள பிரபல பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கூறியது: மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், படிப்பு இடங்களைக் குறைக்கவும், ஆள்குறைப்பு செய்யவும் கல்லூரி முடிவு செய்துள்ளது. அதற்காக எந்தெந்த பேராசிரியர்களை பணியில் நீட்டிக்கச் செய்வது என்பதை முடிவு செய்வதற்காக கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் துறைகளில் பணிபுரியும் இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கு அண்மையில் தேர்வு ஒன்றை கல்லூரி நடத்தியது.மூன்று கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதலில் பேராசிரியர்களுக்கு தனித் தனியாகவும், பின்னர் இரண்டு பேராக சேர்த்தும், மீண்டும் தனித் தனியாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் கடினமான கேள்விகள் கேட்க்கப்பட்டன.தேர்வு முடிவில், 12 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இணைப் பேராசிரியர்கள்கூட பூஜ்யம் மதிப்பெண் எடுத்தனர். அடுத்ததாக, பேராசிரியர்களுக்கும், துறைத் தலைவர்களுக்கும் இந்தத் தேர்வுகளை நடத்த கல்லூரி திட்டமிட்டுள்ளது.இந்தத் தேர்வுகளில் தகுதி பெறுபவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்த சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பணியில் தொடர்ந்து வைத்துக்கொள்ள கல்லூரி முடிவு செய்துள்ளது. கல்லூரியின் இந்த நடவடிக்கைக்கு பேராசிரியர்களிடையே கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக சில பொறியியல் கல்லூரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக பல்கலைகழகத்துக்கும் தகவல் கிடைத்தது. ஆனால், இது அந்தக் கல்லூரிகளின் தனிப்பட்ட நடவடிக்கை. இதில் பல்கலைக்கழகம் தலையிட முடியாது. அதே நேரம், இவ்வளவு காலம் பணியாற்றிய பின்னர் அவர்களுக்கு தேர்வு நடத்தி தரத்தை ஆய்வு செய்வதைவிட, அவர்களைப் பணியில் சேர்க்கும்போதே தேர்வு நடத்தி சேர்த்திருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி