வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடைமைகள்: பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2015

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடைமைகள்: பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா?

சென்னை அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்களின் சீருடைகள், புத்தகங்கள், ஷூக்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால், பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்வதிலிருந்து மாணவ, மாணவிகளுக்குவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோட்டூர்புரம் மேம்பாலம் அருகில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. அண்மையில் பெய்த பலத்த மழையால், இங்கு முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்தது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள்அனைத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். மாணவ, மாணவிகளின் புத்தகங்கள், சீருடைகள், பள்ளி ஷூக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.


இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கூறியதாவது:


அசாருதீன்: அண்ணா சாலையில் உள்ள ஆசம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறேன். என்னுடைய புத்தகம், சீருடைகள் அனைத்தும் வெள்ளத்தில் போய்விட்டன. பள்ளிக்குச் சீருடையில்தான் செல்ல வேண்டும்.வெள்ளத்தில் சீருடைகள் சென்றுவிட்டதை சில நாள்கள் சொல்லலாம். அதற்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆசிரியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தற்போதையே நிலையில் எல்லா பொருள்களையும் உடனே வாங்குவது என்பது சாத்தியமில்லை என்றார்.


ருசிதா: திருவான்மியூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறேன். என்னுடைய புத்தகங்களும், சீருடைகளும் வெள்ளத்தில் சென்றுவிட்டன. சிறிது நாள்கள் காரணம் சொல்லலாம். இருப்பினும், புத்தகம் உள்ளிட்ட இழந்த அனைத்தையும் வாங்க வேண்டியது கட்டாயம் என்றார்.தினேஷ்குமார் (12-ஆம் வகுப்பு), ராஜேஷ் (9-ஆம் வகுப்பு) இருவரும் நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் பிறந்த நாளுக்குக்கூட சீருடைதான் அணிந்து செல்ல வேண்டுமாம். புத்தங்களை எப்படியும் பள்ளியில் மீண்டும் தந்துவிடுவர் என்றாலும், சீருடைகளுக்கு என்ன செய்வது என்று இந்த மாணவர்களுக்கு தெரியவில்லை.


தலைமை ஆசிரியர் அறிவுறுத்தல்:


புத்தகங்களைவிட சில மாணவர்களுக்கு நோட்டுகள் அடித்துச் செல்லப்பட்டது மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஏனென்றால், இந்த நோட்டுகளில்தான் அவர்கள் கணிதம் உள்ளிட்ட பாடங்களை எழுதிவைத்திருந்தனர். இப்போது என்ன செய்வது எனதெரியவில்லை என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.சென்னை அமைந்தகரை, ஷெனாய் நகர் உள்ளிட்ட இடங்களில் கூவம் ஆற்றின்கரையோரம் வசிக்கும் மாணவர்கள், ஷெனாய் நகர் திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் 800 மாணவர்களில், 500-க்கும் மேற்பட்டோர் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சீருடைகளோ, நோட்டுப் புத்தகங்களோ எதுவுமே இல்லை என அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜான் தெரிவித்தார். எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக தலைமை ஆசிரியர் ஜான் கூறினார்.இந்த மாணவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்பாடு செய்வதோடு, பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து புத்தகங்களும் பெறப்பட்டு வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்களிடையே இது தொடர்பான குழப்பத்தைத் தவிர்க்க அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுவான அறிவிப்பை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


"வற்புறுத்தக் கூடாது'


இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:

மிகப்பெரிய அளவில் மழை, வெள்ளம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைப் பாதித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிதாக சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்படும் வரை பள்ளிகளில் அவற்றை வற்புறுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதேபோல், தனியார் பள்ளி மாணவர்கள் புதிதாகச் சீருடைகள்வாங்கும் வரை அவர்களிடமும் சீருடைகளை வற்புறுத்தக் கூடாது என அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி