திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவி வகித்த ஆ.க.குமரகுருவின் பதவிக் காலம் முடிந்து, கடந்த ஆண்டு, ஜூலை மாதம் முதல் புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமலேயே உள்ளது. இதேபோல, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் முதலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலும், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடந்த 5 மாதங்களாகவும் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளன.துணைவேந்தர் பொறுப்பு வகித்த நிலை மாறி, இப்போது தமிழக உயர் கல்விச் செயலர் கன்வீனர் குழு அமைப்பாளராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையின் கீழ் உள்ள உறுப்பினர்களே பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழக வரலாற்றில் ஓராண்டில் 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் கன்வீனர் குழுவே பல மாதங்களாக நிர்வாகம் நடத்தி வரும் நிலை முன்னெப்போதும் இல்லை என்கின்றனர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.இதனால், 5 பல்கலைக்கழகங்களிலும் ஆயிரக்கணக்கான கோப்புகள் மீது முடிவு எடுக்க முடியாமல் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, 2014-15ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், பட்டத்தை பெற்றுவேலைக்குச் செல்லும் மாணவர்கள், மாணவிகளின் எதிர்பார்ப்பு கனவாகவே நீண்டு வருகிறது.
துணைவேந்தர் இல்லாமலே பட்டமளிப்பு விழாவை நடத்தலாம்; ஆனால் என்ன காரணத்தினாலோ பட்டமளிப்பு விழாவும் நடத்தப்படாமலேயே உள்ளது என்கின்றனர் காத்திருக்கும் மாணவர்கள். மேலும், பல்கலைக்கழகங்களில் அவ்வப்போது கூட வேண்டிய ஆட்சிக் குழுவும் கூடவில்லை. உயர் கல்வி முன்னேற்றம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமலேயே உள்ளன.துணைவேந்தர் பதவிக் காலம் முடிவடையும் 3 மாதங்களுக்கு முன்பே புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டு, தகுதியானவர்கள் அடங்கிய பட்டியல் ஆளுநருக்கு அளிக்கப்படும். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரை ஆளுநரும் தேர்வு செய்து, துணைவேந்தர் பதவிக் காலம் முடியும் தருணத்தில் புதிய துணைவேந்தரை அறிவிக்க ஏதுவான நடவடிக்கை இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு மட்டும்தான் 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியிடம் காலியாகி பல மாதங்களாகியும் புதிய நியமனம் அறிவிக்கப்படாமலேயே உள்ளது. 5 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களைப் பெற்ற தெரிவுக் குழுவானது, தகுதியான மூவரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் நடவடிக்கை ஆமை வேகத்திலேயே உள்ளது எனவும் பேராசிரியர்கள் குறை கூறுகின்றனர்.இதுதொடர்பாக மூட்டா தலைவர் டி. மனோகர ஜஸ்டஸ் கூறியதாவது:துணைவேந்தர் பதவி நியமனத்தில் ஏற்பட்டுள்ள அதீத தாமதமானது, பல்வேறு ஊகங்களுக்குவித்திட்டுள்ளது. மேலும், இத்தகைய பதவிக்கான சர்ச்சையும், வழக்குகளும் ஒருபுறம் எழுந்துள்ளன. எனவே, இந்தப் பிரச்னைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருநெல்வேலி, மதுரை, கோவை, வேலூர், கொடைக்கானல் ஆகிய 5 பல்கலைக்கழகங்களுக்கும்தகுதியான துணைவேந்தர்களை வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்க வேண்டும். உயர் கல்வி நிறுவனங்கள் சுயேச்சையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரை மூட்டா மத்திய செயற் குழு வலியுறுத்துகிறதுஎன்றார் அவர்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அவதிதிருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மட்டும், தொலைநிலைக் கல்வியில் 24, முதுநிலைப் பட்டத்தில் 32, சான்றிதழ் வகை படிப்புகளில் 5 என61-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. இவற்றில், 2014-15ஆம் கல்வியாண்டில் படிப்பு முடித்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தட்கல் முறையில் பட்டம் பெற விண்ணப்பித்த நூற்றுக்கணக்கானோரும் பட்டம் பெற முடியாத சூழல் உள்ளது. இதேபோல, 5 பல்கலைக் கழகங்களிலும் சேர்த்து பல்லாயிரக்கணக்கானோர்பட்டம் பெற முடியாமல் தவிப்பில் உள்ளனர். சில இடங்களில் முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித் தேர்வுகூட நடத்த முடியாத சூழல் உள்ளது என்கின்றனர் மாணவர்கள்.
இதுதொடர்பாக மூட்டா பொதுச் செயலர் எஸ். சுப்பாராஜு கூறியதாவது: துணைவேந்தரை நியமிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் பட்டமளிப்பு விழா நடத்தினால்கூட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள் தங்களது எதிர்காலத்தைத் தேர்வு செய்ய வாய்ப்பாக அமையும். 2014-15ஆம் ஆண்டே நிலுவையில் உள்ள சூழலில், 2015-16ஆம் கல்வியாண்டும் நிறைவு பெறும் நிலையை நெருங்கியுள்ளோம். பட்டங்கள் பெறக் காத்திருப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். அதற்குள்ளாக புதிய துணைவேந்தர் நியமனங்கள் நடைபெற வேண்டும் என்றார் அவர்.
Pls add TNTEU in the list.
ReplyDelete