நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை வசதிகள் இருந்தாலும், கல்வியறிவு இன்றி எதுவும் சிறக்காது (DINAKARAN) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2016

நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை வசதிகள் இருந்தாலும், கல்வியறிவு இன்றி எதுவும் சிறக்காது (DINAKARAN)

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை தமிழ்மொழி வழி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.


தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் தன் பங்கேற்பு ஊதிய திட்டம் ரத்து செய்யப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்ற வில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் இப்போதாவது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர் ஆசிரியர்கள்.நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை வசதிகள் இருந்தாலும், கல்வியறிவு இன்றி எதுவும் சிறக்காது. எல்லா துறை வளர்ச்சியும் கல்வி சார்ந்தவைதான் என்பதையாரும் மறுக்க இயலாது. கல்வி நிலையங்கள் சிறப்பாக இருந்தால், கல்வி சரியாக கற்பிக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவருவோர் அறிஞர்களாகவும், தொழில்நுட்ப நிபுணர்களாகவும் திகழ்வார்கள். இது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இதனால்தான் கல்வி நிலையங்களுக்கும், அதில் அறிவு புகட்டும் ஆசிரியர்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரவேண்டும்.

ஆனால், இதற்கெல்லாம் மாறாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற அடக்குமுறை ஆசிரியர்கள் மீது ஏவப்படுவது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.இதுபோன்றுதான் சத்துணவு பணியாளர்களும் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர். இதற்காக வேலை நிறுத்த ஆயத்த மாநாடும் நடத்துகின்றனர். ஆனால், இதில் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்க அரசு திடீர் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. அதோடு, சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தின்போது ஆசிரியர்களை சத்துணவு வழங்க அரசு கோரியுள்ளது.

இந்த இரண்டுமே கல்வி நிலையங்கள் தொடர்பானவை. இந்த போராட்டங்களால் பாதிக்கப்படுவது ஆசிரியர்களும், ஊழியர்களும் மட்டுமல்ல. மாணவர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உணர்ந்து பார்க்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், கோரிக்கைகளை பரிசீலித்து ஆவன செய்வதும் அரசின் ஜனநாயக கடமைகளில் ஒன்றுதான். இதற்கு மாறாக போராட்டத்தை அடக்க முயற்சிப்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது. கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை, ஏற்புடைய அம்சங்களை ஆராய்ந்து நிறைவேற்றுவதை பொறுப்பாக உணர்ந்து அரசு செயல்பட வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி