தேர்வு மதிப்பெண்கள்: பக்கங்களின் எண்ணிக்கைக்கா? மாணவர்களின் புரிதலுக்கா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2017

தேர்வு மதிப்பெண்கள்: பக்கங்களின் எண்ணிக்கைக்கா? மாணவர்களின் புரிதலுக்கா?

தமிழகத்தில் சுமார் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசுமற்றும் நிர்வாக ஒதுக்கீடு என சுமார் 2.50 லட்சம் இடங்கள் உள்ளன. பொறியியல் கல்லூரிகள் குறைவாக இருந்தபோது பிளஸ் 2-வில் கணிதம்,
வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் இருக்க வேண்டும் என குறைந்தபட்சத் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றதால் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கு அதிகத் தேவை ஏற்பட்டது. அதனால் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாகத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்குமிருந்த திருமண மண்டபங்களும் மாட்டுக் கொட்டாய்களும் கூட பொறியியல் கல்லூரிகளாக உருமாறின. ஒரு சில கல்லூரிகளின் விளம்பரங்களைப் பார்த்தால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தோற்றுப் போய்விட வேண்டும். இந்தியாவில்ஆராய்ச்சிப் படிப்புப் படித்தவர்கள் அனைவரும் தங்கள் கல்லூரியில்தான் பணிபுரிவது போலப் பட்டியலிட்டிருப்பார்கள். ஆனால் அண்ணா பல்கலைக்கழகமோ அல்லது அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்கழகமோ ஆய்வுக்குச் சென்றால் அங்கு யாருமே இருக்க மாட்டார்கள்.

ஓரிரு நாள்களுக்கு முன் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணியிலிருந்து விலகியது போலக் கடிதம் மட்டும் ஆய்வுக்கு வந்தவர்களுக்குக் காட்டப்படும். ஒவ்வொரு சுயநிதிக் கல்லூரியும் ஏதாவது ஒரு வகையில் மாணவர்களிடம் கட்டணத்தைச் சுரண்டுவதில் மட்டும் தயக்கம் காட்டுவதேயில்லை. அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தாவிட்டால் அங்கு படிக்கவே முடியாது. இது தொடர்பாகப் புகார் அளித்தால்அண்ணா பல்கலைக் கழகம் அவ்வப்போது பல கல்லூரிகளில் ஆய்வு நடத்தும். ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது அண்ணா பல்கலைக்கழகத்துக்கே வெளிச்சம். வேலை வாய்ப்பின்மை, கட்டணக் கொள்ளை, ஊதியம் குறைவு, தரமில்லாத ஆசிரியர்கள் எனப் பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவேபொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வோர் ஆண்டும்சுமார் ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் காலியாகவே உள்ளன. இதனால் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வர வேண்டிய நிதி குறைகிறது.

இதை ஈடுகட்டவோ என்னவோ, ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களிடம் இருந்து பல்வேறு கட்டணங்களின் மூலம் பணம் பெறத் தொடங்கி இருக்கிறது அண்ணா பல்கலைக் கழகம். ஒவ்வொரு பருவத்திலும் தேர்வுக் கட்டணமாக, சுமார் 1.50 லட்சம் மாணவர்களிடம் தாளுக்கு ரூ.150 வீதம் 6 தாள்களுக்கு ரூ.900 எனக் கணக்கிட்டால் மொத்தம் ரூ.13.50 கோடி வசூலிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது சுமார் 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதில்லை. தேர்ச்சி பெறாத மாணவர்கள் இவர்கள் தங்கள் விடைத்தாள் நகல் பெற ஒரு தாளுக்கு ரூ.300 வீதம் செலுத்த வேண்டும் என்கிறது பல்கலைக் கழகம். ஒரு பக்கத்துக்குநகல் பெற ரூ.2 வீதம் கொடுத்தால் போதும் என்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம். ஆனால், அது எத்தனை பக்கமாக இருந்தாலும் இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் பெறுவதற்கான கட்டணம் ரூ.300தான். சில கல்லூரிகள் இதைவிடக் கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கின்றன. விடைத்தாள் நகலைப் பார்த்தவுடன் மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. ஏனெனில், மாணவர்கள் எழுதிய விடைத்தாளில் பல பக்கங்களில் திருத்தப்பட்டிருக்காது. திருத்தப்பட்டிருந்தாலும் அதற்கு மதிப்பெண் போடப்பட்டிருக்காது. மதிப் பெண் போடப்பட்டிருந்தாலும் அது முதல் பக்கத்தில் இட்டுக் கூட்டப்பட்டிருக்காது. எப்படியோ சம்பந்தப்பட்டவர் தேர்ச்சி பெற்றிருக்க முடியாது. அந்த விடைத்தாள் நகலைக் கல்லூரி ஆசிரியரிடம் காட்டி கூடுதல்மதிப்பெண் வரும் என்று தெரிந்தால் கையெழுத்துப் பெற்று மீண்டும் ரூ.400 கட்டி மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் பெரும்பாலானவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் கிடைக்காது. தலைவிதி என்று சொல்லிப் பல மாணவர்களும் பெற்றோரும் மீண்டும் விண்ணப்பிக்க மாட்டார்கள். ஆனால் கண்டிப்பாகக் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாணவர்கள் பலர் மீண்டும் ரூ.3000 கட்டி விண்ணப்பிப்பார்கள். அதிலும் ஒரு சிலருக்குத்தான் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். கூடுதல் மதிப்பெண் பெற்றால் ரூ.3000 திரும்பக் கொடுக்கப்படும். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் முதலில் கட்டிய ரூ.700 (ரூ.300 ரூ.400) திரும்பத் தரப்படமாட்டாது.ஆண்டுக்குப் பல கோடி ரூபாயை மறு மதிப்பீட்டுக் கட்டணம் என்ற பெயரால் வசூலிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் கூடுதலாகக் கல்விக் கட்டணமாக வசூலிக்கும் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பது தெரியவில்லை. மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்போரில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற அனுமதிக்கக் கூடாது என்று அண்ணா பல்கலைக் கழக உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடைத்தாளை யாரும் சரியாக மதிப்பிடுவது கிடையாது. தாங்கள் எழுதியது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். விடைத்தாள் நகலைக் கல்லூரி ஆசிரியர்களிடம் காட்டி, அவர்கள் திருப்தியடைந்த பின்தான் மீண்டும் பணம் கட்டுகின்றனர். ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால் தேர்வு முறையில் ஏற்படும் குளறுபடிகளாலும் ஆசிரியர்களின் அலட்சியத்தாலும் ஏற்படும் மனப் பிரச்னைகளுக்குத் தீர்வென்ன என்பது குறித்தும் அண்ணா பல்கலைக் கழகமும் அரசும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.மொத்தமுள்ள 570-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த ஆண்டு 37 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்க மாணவர்களின் திறனைச் சோதிக்கும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வராவிட்டால் உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் தனது பெருமையை இழக்கும் நாள்வெகு தொலைவில் இல்லை. -ஆர்.வேல்முருகன் மறு மதிப்பீட்டில் ஈட்டும் கோடிகள் கடந்த 6 ஆண்டுகளில் மறு மதிப்பீடு என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களிடம் இருந்து வசூலித்திருக்கும் தொகை சுமார் ரூ.90 கோடி.ஒவ்வோராண்டும் இது அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இதுதான் தண்டனையா?

 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியரை கல்லூரி முதல்வர்தான் தீர்மானிக்கிறார். இனிமேல் இவ்வாறு தவறு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட அனுமதிப்பதில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் தீர்மானித்து 1070 பேராசிரியர்களைத் தேர்வுத்தாள் திருத்தும்பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது.

கலக்கும் விடியோக்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு முறையைக் கிண்டலடித்து மெட்ராஸ் சென்ட்ரல் என்ற பெயரில் இணையதளத்தில் யு டியூபில் வெளியிடப்பட்ட விடியோக்கள் மாணவ, மாணவியரிடம் மிகவும் பிரபலம். மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் 16 மதிப்பெண் கேள்விக்கு 18 மதிப்பெண் போடுவதும், சோகத்தில் இருக்கும்போது பேப்பரையே திருத்தாமல் குறைந்த மதிப்பெண் போட்டு மாணவரை தேர்ச்சி செய்யவிடாமல் தடுப்பதும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவோரின் மனநிலையைப் புரியவைக்கிறது.

ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் வேறு துறை மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதாகவும் விடியோ வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எப்படித் தேர்ச்சிபெற்றேன் என்பதே தெரியாமல் சிலர் பேசிக் கொள்ளும் விடியோவும் வைரலாகப் பரவியுள்ளது.இந்த விடியோக்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீட்டு முறையையும் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளையும் தோலுரித்துக் காட்டுகிறது. தேர்வு முடிவுகளில் தாமதம்... அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டுத் தேர்வு முடிகள் கடந்த ஆக. இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மிகச்சிறந்த தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் என்று கூறிக் கொள்ளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களால் மாணவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இணையதளத்தில் பார்க்கும்போது தேர்வு முடிவுகள் வரவில்லை. நேரில் சென்று கேட்டபோது விரைவில் வெளியிடப்படும் என்று பலமுறை கூறினார்கள். இறுதியில் ஒருவழியாக தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்திலேயே தொழில் நுட்பக் கோளாறென்றால்...?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி