அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம்: பெற்றோருக்கும் ஊக்கத் தொகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2018

அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம்: பெற்றோருக்கும் ஊக்கத் தொகை


பேராவூரணி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் கிராம மக்கள் சார்பில் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், புதிதாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு புரவலர்கள் மூலமாக ஒரு கிராம் தங்க நாணயம், பெற்றோருக்கு ஊக்கத் தொகையாக ரூ.1000-ம் வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே 15 புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். புதிதாக பள்ளியில் சேர்ந்தவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிரகலாதன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தினர்.
தலைமை ஆசிரியர் வாசுகி வரவேற்றார்.விழாவில், புதிதாக பள்ளியில் சேர்ந்த 15 மாணவர்களுக்கு நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கினர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் 15 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கினார்.கூட்டத்தில், விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது புதிதாக 50 மாணவர்களை சேர்ப்பது, அவர்களுக்கும் இதேபோல தங்க நாணயம், பெற்றோருக்கு ஊக்கத் தொகையும் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது.மாணவர் முன்னேற்ற அமைப்பின் தலைவர் பழனிவேல், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் செல்வராசு, கிராம பிரமுகர்கள் அண்ணா பரமசிவம், ராமநாதன், ராமச்சந்திரன், ஆசிரியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: இந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடிக்கும்மாணவ, மாணவிகள் 9-ம் வகுப்பில் சேர, 5 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கோ அல்லது 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கோ செல்ல வேண்டியுள்ளது.

இதனால் இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி, நாங்கள் பங்களிப்புத் தொகையை அரசுக்கு செலுத்தியுள்ளோம். ஆனால், இப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 120 மாணவர்கள் இருந்ததால்தான், தரம் உயர்த்த முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை அதிகரிக்க, இதுபோன்ற முயற்சியை முன்னெடுத்துள்ளோம் என்றனர்.

4 comments:

  1. சாதனை படைக்கும் இப்பள்ளி

    ReplyDelete
  2. Ippave lancham kuduthu pazhakkureenga.

    ReplyDelete
  3. Ippave lancham kuduthu pazhakkureenga.

    ReplyDelete
  4. எத்தனை ஆசிரியருக்கு பலன் கிடைக்க போகுதோ....😃😃😃😃

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி