தந்தை கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக்கடன் மறுப்பு: வங்கி முடிவு சரியானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. - kalviseithi

Jun 29, 2018

தந்தை கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக்கடன் மறுப்பு: வங்கி முடிவு சரியானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தந்தை வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாததால், நர்சிங் படிக்கும் அவரது மகளுக்கு கல்விக்கடன் வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வங்கி எடுத்த முடிவு சரியானது என உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியான தீபிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணன்பேட்டையில் உள்ள செவிலியர் கல்லூரியில் நர்சிங் படிக்கிறேன். கல்விக்கடன் கோரி பாரத ஸ்டேட் வங்கியின் தலைஞாயிறு கிளையில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனக்கு கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இது சட்ட விரோதமானது. எனவே எனக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கல்விக்கடன் வழங்கஉத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.வைத்யநாதன் முன்பு நடந்தது.

அப்போது “நர்சிங் படிப்பு கல்விக்கடன் திட்ட வரம்புக்குள் வராது. மேலும் மனுதாரரின் தந்தை பல கடன்களைப் பெற்று அவற்றை முறையாக திருப்பி செலுத்தவில்லை என்பதால்தான் மனுதாரருக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டது”என வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி, ‘‘அரசியல் நிர்பந்தம் காரணமாக பலருக்கு வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் வழங்குகின்றன. அந்த நபர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் சுலபமாக வெளிநாடுகளுக்கு தப்பிசெல்கின்றனர். இதனால் வங்கியில் பணிபுரியும் அப்பாவி ஊழியர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

வழங்கப்பட்ட வங்கிக் கடன் சிறியதோ பெரியதோ, அதை முறையாக வசூலித்தாக வேண்டும்.கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டுபவர்களின் பின்னால் ஓடுவதைவிட, கடன் தொகையை திருப்பி செலுத்த தகுதியில்லாதவர்களின் விண்ணப்பங்களை ஆரம்பத்திலேயே நிராகரிப்பதுதான் நல்லது.எனவே வாங்கிய கடனை தந்தை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக மகளுக்கு கல்விக்கடன் வழங்க மறுத்து வங்கி நிர்வாகம்பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி