உதவிப் பேராசிரியர் பணி நியமனம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2018

உதவிப் பேராசிரியர் பணி நியமனம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு


அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் வயது நிர்ணயம் தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் பி.சுரேஷ்குமார், சென்னை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, கடந்த 2014 -15 மற்றும் 2015- 16 ஆம் கல்வியாண்டுகளில் மருத்துவ மேற்படிப்பை முடித்துவிட்டு, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது பணியாற்றி வருகின்றோம். மருத்துவ மேற்படிப்பை முடித்தவுடன் எங்களுக்கு முதுநிலை உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் நியமன விதிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அதில், இந்த பதவிக்கு அதிகபட்ச வயது 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதியை திரும்பப்பெறக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. எனவே, இதனை திரும்பப் பெறவும், விதிகள் திருத்தத்துக்கு தடை விதிப்பதுடன், அதனை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 19 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி