தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச பயிற்சி அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழகத்தில் 37, 211 அரசுப் பள்ளிகள்,8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் (சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன்) பள்ளிகள் உள்ளன. இந்தப்பள்ளிக்கூடங்களில் சுமார் 1.25 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர்.ரூ.27,000 கோடி: தனியார் பள்ளிகளில் மட்டும் சுமார் 40 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசு கல்விக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.27,000 கோடி செலவிடுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழக அரசின் கல்விக் கொள்கையின்படி முதல் மொழிப்பாடமாக தமிழும், இரண்டாவது மொழிப்பாடமாக ஆங்கிலமும் கற்பிக்கப்படுகிறது.தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றாலும், அவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் முடிவதில்லை. உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன. இதனால், தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த 1991 -ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டன. மேலும், இந்த பள்ளிக்கூடங்களில் 50 சதவீதம் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க அனுமதி வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு மற்றொரு அரசாணையைப் பிறப்பித்தது.ஆனால், இந்த விவரங்கள் தெரியாமல் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் பெற்றோர், கல்விக்காக ஒரு குழந்தைக்கு பல லட்சம் ரூபாய் செலவழிக்கின்றனர். தமிழ் வழியில் இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேசும் (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பயிற்சி வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள்தொடங்க வேண்டும் என கோரி அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனுவுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. எனது கோரிக்கைகளை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை அரசு, ,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தின் சட்ட அதிகாரி சி.நாகராஜன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்பைடையில் ஆங்கில வழிக் கல்வி எத்தனை பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி