மாணவர்களின் கல்வி விஷயத்தில் தமிழக அரசு ஈகோ பார்க்க கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை - kalviseithi

Oct 9, 2018

மாணவர்களின் கல்வி விஷயத்தில் தமிழக அரசு ஈகோ பார்க்க கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை


மாணவர்களின் கல்வி விஷயத்தில் அரசு ஈகோ பார்க்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தனது மகன் 10ம் வகுப்பு படித்து வருவதாகவும்  மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால், நாடுமுழுவதும் நடைபெறும் ஒரே நுழைவு தேர்வான, ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.தற்போது, புதிய நிபுணர்களை நியமித்து, பாடத்திட்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.  இந்த குழுவின் பணிக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருந்தால் தான், புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். ஏற்கனவே குழுவில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உயர்மட்ட குழுவிலிருந்து ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை மாற்ற தடை விதித்திருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘உயர்மட்டக்குழுவின் பணி முடிந்துவிட்டது என்றும் அதே போல பாடத்திட்ட குழுவின் பணியும் முடிந்து விட்டது. ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்’’ என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘உயர்மட்டக்குழு பணிகள் இன்னும்முடிவடையவில்லை’’ என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை  வேறு துறைக்கு மாற்றினாலும் கூட ஆலோசனை கூட்டங்களில்  அவரை ஏன்  சிறப்பு அழைப்பாளராக அழைக்கக் கூடாது? மாணவர்களின் கல்வி விஷயத்தில் தமிழக அரசு ஈகோ பார்க்க வேண்டாம். மாணவனின் கல்வி நலனே முக்கியம். தமிழக கல்வி அமைச்சர் கூறியது போல, மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க வெளிநாடுகளில் இருந்து நிபுணர்களை அழைத்துவரும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? இது குறித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி