சமீபகாலமாக அரசுப்பள்ளிகள் பேசுபொருளாக மாறிவருவது தமிழ்சமூகத்தின் ஆரோக்கியமான மாற்றாகக் கொள்ளலாம். பொதுத்தேர்வில் ரேங்க் வெளியிடாதது, பாடத்திட்ட மாற்றம், புத்தக வடிவமைப்பில் புதுமை, சிறிது சிறிதாக எல்லாவற்றையும் கணினிமயமாக்கல் உள்ளிட்ட பல விரும்பத்தக்க மாற்றங்களால் பள்ளிக் கல்வித்துறை தன்னைத் தரப்படுத்திக் கொண்டுவருகிறது. அரசுப்பள்ளிகளின் மீதான மக்கள் பார்வை மாறத் தொடங்கியிருந்தாலும் சமூகத்தில் ஆசிரியர்கள் மீதான மதிப்பீடு என்பது ஆரோக்கியமானதாக இல்லை. சமூக வலைதளங்களில் ஆசிரியர்களின் சம்பளம் குறித்த மீம்ஸ்கள் ஒருபக்கம் இருக்க, இணையம் சென்று சேராத மக்களின் பொதுப் புத்தியிலும் அதுவேதான் நிலைப்பாடு. அதனூடாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களை நிரூபிக்கும் சூழலில் தான் இருக்கிறார்கள்.
ஆங்காங்கே அரசுப்பள்ளிகளை வலுப்பெறச் செய்யும் முற்போக்கு அமைப்புகள் ஆசிரியர்களாலும், ஆர்வலர்களாலும் நடத்தப்பட்டு வருவதைக் கவனிக்க முடிகிறது. கற்பித்தலில் மாற்றை முயலும் பல அரசுப்பள்ளி ஆசிரியர்களை கல்வித்துறையை விட கல்விசார் தனியார் அமைப்புகளே அதிகம் அடையாளம் கண்டு கௌரவப்படுத்தி வருகின்றன. தேனி , திருப்பூர் மாவட்டங்களில் ஆசிரியர்களால் அரசுப்பள்ளிகள் வண்ணமயமாகி வருவது குறிப்பிடத்தக்கது. நிகழ்காலத்தை அரசுப்பள்ளிகளின் மறுமலர்ச்சி காலம் என்றே கருதுகிறேன்.
முகநூலும், சமூக வலைதளங்களும் கல்வியின் தனியார்மயத்திற்கு எதிராகவே பயணிப்பதையும் பார்க்க முடிகிறது. கல்வியை விற்பனைப் பொருளாக்குவதை சமூகம் விரும்பவில்லை என்பதற்கு இணையதளமெங்கும் சாட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. இதை பேசிக்கொண்டே, தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்திருக்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் காரணங்களாய் முன் வைப்பது - சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் தான். அதனை சரிப்படுத்த அதன்மீது தலையீடு செய்யாமல் தனியாரை நாடுவது தான் தவிர்க்கப்பட வேண்டிய அவலம்.
தற்போது கழிப்பறை வசதி, சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து சுகாதார விசயத்திலும் நூற்றுக்கணக்கான முன்னுதாரண அரசுப்பள்ளிகள் நம் முன் நிற்கின்றன. அதில் முழுமைபெறுதல் தான் சவால். பெரும்பான்மையான பள்ளிகளில் கழிவறைக் கட்டிடம் இருக்கிறதேயொழிய அதன் பராமரிப்பு, பயன்பாடு என்பது கேள்விக்குறியே. அதிலும் மேல்நிலைப்பள்ளிகளில் சொல்லவே வேண்டாம். பெண்குழந்தைகளுக்கான இவ்வசதியின்மை மனக்காயங்களையும் அவமானங்களையும் மறைத்துகொண்டு பயணிக்க வைக்கிறது. இது பள்ளிக்குள் மட்டும்தான் என்பதில்லை பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுஇடங்கள் எல்லாவற்றிலும் நாற்றமெடுக்கும் பிரச்சனை. அதற்கான வழியை தனிமனித கற்றலிலிருந்தே நாம் கொணரமுடியும்.
பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்துவதில் விழிப்பற்றவர்களாகவே நாம் இருக்கிறோம். வீட்டுக் கழிவறையைப்போல நாம் பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்துவதில்லை. (தண்ணீர் இருந்தாலும் வரும்போது ஊற்றி சுத்தம் செய்துவிட்டு வருவதில்லை.) 'இது நம்ம இடம்' என மனம் ஏற்க மறுப்பதால் உண்டாகியிருக்கும் சமூகப்பிரச்சனை இது. கழிவறைப் பயன்பாடு குறித்த கற்றலும் கற்பித்தலும் அதிகம் தேவைப்படும் நாடு இந்தியா.
மேற்கத்திய நாடுகள் கழிவறைப் பயன்பாடு குறித்த விழிப்பை மாணவர்களுக்கு தொடக்க நிலைப் பாடத்திட்டத்திலேயே செய்முறை வடிவில் கற்பித்துவிடுகின்றன .
ஆனால் நாம், இன்றும் கூட " ச்சீ.." என பொதுக்கழிப்பிடங்களில் இருந்து தப்பித்துக் கொள்கிறோம். நமக்கு ஐந்து ரூபாய் கொடுத்து மல ஜலம் கழிக்க கட்டணக் கழிப்பறைகள் இருக்கின்றன. இவை பள்ளியில் கற்க தவறிய சமூகத்தின் சாட்சிகளாக ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் நின்று நம்மிடம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன.
சுற்றுச்சுவரற்ற பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட டைல்ஸ் போட்ட கழிவறைகள் சேதப்படுத்தப்படுகின்றன. காவலர்கள் இல்லாத பள்ளிகள் கிடைத்த கழிவறை வசதிகளை இழந்துவிட்டு நிற்கின்றன. விடுமுறை தினங்களில் வளாகத்தில் விளையாட வரும் மாணவர்களே கழிவறைக்குழாய்களைச் சேதப்படுத்திவிடுவது என்பது சாதாரணமாக ஊரெங்கும் நடந்துவிடுகிற எதார்த்தம். பொதுச்சொத்தைச் சேதப்படுத்தும் மனநிலையை மாற்ற நாம் நூற்றாண்டுக்கு கற்பித்தலில் பாடுபடவேண்டியிருக்கும். ஆக அரசுப்பள்ளிகளில் கழிவறை வசதிக்குறைபாடுகள் நிதி ஒதுக்குவதாலும் அரசே சிறப்பாக கட்டிக்கொடுப்பதாலும் சீராகிவிடாது. அதை தாண்டிய மனமாற்றங்களை வகுப்பறை வாயிலாகவே போதிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு நெடுங்காலமாகலாம் என்பதே கசப்பான உண்மை. அல்லது தீவிரமான சட்டங்களால், சமரசமற்ற நடவடிக்கைகளால் சரிசெய்யப்படலாம்.
இது தனியார் பள்ளி கழிவறை வசதிகளுக்கும் பொருந்தும். அருகாமைப்பள்ளிகளின் சுகாதாரத்தில் தலையீடு செய்வதிலிருந்தே இந்த மாற்றை நாம் தொடங்க முடியும். நாம் என்பதில் ஆசிரியர்களே முதன்மையானவர்கள்.
முகநூல் முழுக்க அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நற்செயல்கள் தொடர்ந்து பதிவாகிய வண்ணம்தான் உள்ளன. சமீபத்தில், மாணவர்களுடனான பேரன்பிற்கு கிடைத்த பரிசாய் பகவான் எனும் ஆசிரியரின் இடமாறுதலும், மாணவர்களின் பாசப்போராட்டமும் இணையத்தில் வைரலானது. இது அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மீதான நேர்மறையான பக்கங்களைக் கவனிக்க வைத்தது. என்னைப் பொருத்த மட்டில் பகவான் என்பவர் அன்பாசிரியர்களுக்கான ஒரு மாதிரி மட்டுமே. அந்த வெளிச்சத்திற்குப் பிறகான அவரது செயல்பாடுகள் கவனம்பெறவில்லை. பாலிவுட்நடிகர்கள் வாழ்த்துச் சொல்லுமளவுக்கு சென்று சேர்ந்திருந்தது அந்த வீடியோ. அவருக்கு கிடைத்த புகழுக்கு இன்றிருக்கும் இணையத்தை முறையாகப் பயன்படுத்தியிருந்தால் பல வசதிகளை அவர் பணிசெய்யும் பள்ளிகளுக்குள்ளாவது அவர் சாதித்திருக்க இயலும். அது முடியாமல் போனது அவர் அமைப்பாக செயல்படாததன் விளைவென்றே கருதுகிறேன். ஆசிரியர்கள் பொதுநலன் சார்ந்து களமிறங்க வேண்டிய காலகட்டமென்பதால் இதைப்பேசுகிறேன். அதேநேரத்தில் பகவான் என்பதால் மட்டுமே இக் கேள்விக்குத் தகுதிபெறுகிறார். வைரலான வீடியோ செய்த ஒரே நல்ல காரியம் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கும் பகவான் போன்ற ஆசிரியர்களைப் பேசுபொருள் ஆக்கியதுதான். தொலைக்காட்சியில் அந்த வீடியோவைப் பார்த்து விட்டு எங்க ராமலிங்கய்யா மாதிரி, எங்க செல்வன் சார் மாதிரி, எங்க ராஜி மிஸ் மாதிரி என பள்ளிக்கொரு ஆசிரியர் தூக்கிக் கொண்டாடப் பட்டார். "அந்த வீடியோ பாத்ததும் உங்க ஞாபகம் தான் சார் வந்தது" என அன்பாசிரியர்கள் ஊரெங்கிலும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். பகவான் எனும் சொல்லே அன்பாசிரியருக்கான குறியீடாக மாறியிருக்கிறது. அவரைத் தொடர்ந்து
இப்போது அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசுமேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் சுவாமிநாதன் என்பவர் இணையத்தில் வைரலாகியிருக்கிறார். கடந்த காலாண்டு விடுமுறையில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளைத் தூய்மை செய்யும் அறப்பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அந்த புகைப்படம் வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிடப்பட்டு பலரால் பலகுழுக்களுக்கு பகிரப்பட்டது. பின்னர் முகநூல், டிவிட்டரிலும் பகிரப்பட்டு வைரலானது. இப்படியான ஆசிரியர்களின் கற்பித்தலைத் தாண்டிய செயல்பாடுகள் வணங்கத்தக்கது. அவருக்கு இணையதளம் முழுக்க பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. காந்தி, ஆசிரமத்தில் கழிப்பறைத் தூய்மையிலிருந்து தான் தொடங்கினார். காந்தியின் கவனிக்கப்படவேண்டிய பக்கங்களில் இது முக்கியமானது. நாம் தொடங்காமல் யார் தொடங்குவது. மாணவர்களின் கழிவறைத்தூய்மைக்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் பற்றவைத்தல் முக்கியம். அந்த பொறி தான் இது. இணையம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனச்சாட்சியாக, அறமாக நின்று அரசுப்பள்ளிகளை உயர்த்தும். காக்கும் கடவுளாக பகவான்களும், சுவாமிகளும் தொடர்ந்து வெளிப்படவேண்டும். வெளிப்படுவார்கள்.....
-சக ஆசிரியன்.
சக.முத்துக்கண்ணன்.
அரசுமேல்நிலைப்பள்ளி,
விக்கிரமங்கலம்.
அரியலூர் மாவட்டம்.
621701.
9944094428.
மிக சிறப்பு.
ReplyDeleteஆசிரியர்களின் அசத்தலான செயல்பாடுகள் பல அவரது கடமை தானே என்று பொதுமக்களால் அலட்சியப்படுத்தப்படுகிறது.
பனத்திற்க்காக மட்டும் பணியாற்றுபவர்கள் அல்ல ஆசிரியர்கள்,
படிப்பையும் பண்பாட்டையும் பல தலைமுறைக்கு பயிற்றுவிப்பவர்களே ஆசிரியர்கள்.
அதற்கு இக்கட்டுரை நிகழ்வுகளே சான்று.
கட்டுரை ஆசிரியர் திரு.முத்துக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
தங்கள் பணி இனிதே தொடரட்டும்....
திருமதி.இராஜேஸ்வரிகார்த்திகேயன்
ReplyDeleteஅரியலூர்
இதனை ஆசிரியரே செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆசிரியரின் பணி மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பகவான் போல் பாசம் காட்ட வேண்டும். கற்பித்தலில் திறமையைக் காட்ட வேண்டும். மற்றபடி கழிவறையை சுத்தம் செய்வது என்பது அவரது உயர்ந்த உள்ளத்தைக் காட்டினாலும், அது சிறப்பானது அல்ல...
ReplyDeleteThiruthuva raj அவர்களே கட்டுரையின் கடைசி பாராவை திரும்ப வாசிக்கவும்.
ReplyDeletesalutes to Swamy sir. Please send to Government in this matter. We pray for Swamy sir and his family with students got great future
ReplyDeleteVaalthugal swami sir
ReplyDeleteசுற்றுச்சுவரற்ற பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட டைல்ஸ் போட்ட கழிவறைகள் சேதப்படுத்தப்படுகின்றன. காவலர்கள் இல்லாத பள்ளிகள் கிடைத்த கழிவறை வசதிகளை இழந்துவிட்டு நிற்கின்றன. சுற்றுச்சுவர் கட்டுவதும் காவலர்களை நியமிக்காமல் இருப்பது அரசின் தவறு. இந்த காரணங்களுக்காகத்தான் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்.தூய்மை இந்தியா என்ற பெயரில் பல கோடி ரூபாய் செலவில் மத்திய மாநில அரசுகள் விளம்பரம் செயகின்றன.அந்த பணத்தை கொண்டு எவ்வளவோ கழிவரைகளைக் கட்டலாம் பராமரிக்கலாம்.அரசின் தவறுகளை அரசிடம் தெரிவித்து நிவாரனம் கானுங்கள் அதுவே நிரந்தர தீர்வு! இப்படி நீங்கள் செய்வது என்று முடிவெடித்தால் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு தூய்மை பணியை மட்டும் செய்யுங்கள்.ஆசியியருக்குள்ள மரியாதையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.
ReplyDeleteசுற்றுச்சுவரற்ற பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட டைல்ஸ் போட்ட கழிவறைகள் சேதப்படுத்தப்படுகின்றன. காவலர்கள் இல்லாத பள்ளிகள் கிடைத்த கழிவறை வசதிகளை இழந்துவிட்டு நிற்கின்றன. சுற்றுச்சுவர் கட்டுவதும் காவலர்களை நியமிக்காமல் இருப்பது அரசின் தவறு. இந்த காரணங்களுக்காகத்தான் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்.தூய்மை இந்தியா என்ற பெயரில் பல கோடி ரூபாய் செலவில் மத்திய மாநில அரசுகள் விளம்பரம் செயகின்றன.அந்த பணத்தை கொண்டு எவ்வளவோ கழிவரைகளைக் கட்டலாம் பராமரிக்கலாம்.அரசின் தவறுகளை அரசிடம் தெரிவித்து நிவாரனம் கானுங்கள் அதுவே நிரந்தர தீர்வு! இப்படி நீங்கள் செய்வது என்று முடிவெடித்தால் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு தூய்மை பணியை மட்டும் செய்யுங்கள்.ஆசியிரியருக்குள்ள மரியாதையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.
ReplyDelete