School Morning Prayer Activities - 25.10.2018 ( Kalviseithi's Daily Updates... ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2018

School Morning Prayer Activities - 25.10.2018 ( Kalviseithi's Daily Updates... )

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

உரை:
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

பழமொழி :

Covert all, lose all

பேராசை பெரு நட்டம்

பொன்மொழி:

கிரீடங்களை விட
கனிந்த இதயங்கள்
மேலானவை.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.பியானோ சட்டங்களின் எண்ணிக்கை?
88

2.ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன?
22

நீதிக்கதை

தேளும் தவளையும் – ஈசாப் நீதிக் கதை

அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது.  அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.

தவளையைக் கண்ட தேள், “தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?” என்று கேட்டது.

“நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!“, என்றது தவளை.

தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்?
இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது.
தேள் தவளையின் முதுகில் கொட்டியது.  அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.

தேள் தவளையைப் பார்த்து, “தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?” என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, “எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை” என்று சொன்னது தவளை.

ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும்.  இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை.
ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள்,  மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.
கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது.

தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது.  தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

நீதி:

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது.  அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.

இன்றைய செய்தி துளிகள்:

1.ஹெல்மெட் அணிய வேண்டும் உத்தரவை ஏன் முறையாக அமல்படுத்தவில்லை?: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

2.2020 ஏப்ரல் 1க்கு பிறகு பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனை, பதிவு செய்தல் கூடாது: உச்ச நீதிமன்றம்

3.இந்திய கப்பற்படைக்கு ராக்கெட்டுகள் வாங்க இஸ்ரேலுடன் ரூ.5,685 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

4.சர்வதேச கராத்தே போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டு!

5.ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10000 ரன்களை வேகமாக கடந்து விராட்கோலி உலகசாதனை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி