வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா? ஜாக்டோ-ஜியோவுடன் அரசு இன்று பேச்சு - kalviseithi

Nov 30, 2018

வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா? ஜாக்டோ-ஜியோவுடன் அரசு இன்று பேச்சு


டிசம்பர் 4 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த அமைப்பினருடன் தமிழக அரசு வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே, வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா என்பது தெரிய வரும்.

2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தோருக்கும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அளிக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் அளிக்க வேண்டும் என்பன உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு ஊசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

டிசம்பர் 4-ஆம் தேதி முதல்...: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என்று ஜாக்டோ-ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதித்த நேரத்தில் மீட்பு-நிவாரணப் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தருணத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டால் நிவாரணப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டுமெனவும் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு பேச்சுவார்த்தை: ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக, அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அரசு சார்பிலும், ஜாக்டோ-ஜியோ சார்பில் அதன் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்தே, டிசம்பர் 4 முதல் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுமா அல்லது திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா என்பது தெரிய வரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி