பொறியியல் கல்லூரியில் குறிப்பிட்ட பாடங்களில் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதி: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2018

பொறியியல் கல்லூரியில் குறிப்பிட்ட பாடங்களில் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதி: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பரிந்துரை


நாடு முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புத்தகத்தை பார்த்து குறிப்பிட்ட தேர்வுகளை எழுத அனுமதிக்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் கடந்த மாதம் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

 இதில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர்கள் ஒரு சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் புதிய நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக தங்கள் யோசனையை தெரிவித்தனர். இது கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அதேநேரத்தில் இத்திட்டத்தை குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் 3 மற்றும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய அரசின் உயர்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த ஆலோசனை ஏற்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த புதிய நடைமுறை அடுத்த 2019-20ம் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக வேலூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் கூறுகையில், ‘குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மட்டும் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை அயல்நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அதே நடைமுறையை நமது சூழலுக்கு ஏற்ப செயல்படுத்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. அரசாணை பிறப்பிக்கப்பட்டுஅடுத்த கல்வி ஆண்டுதான் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி