பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10,000 தனிப்படை - kalviseithi

Dec 26, 2018

பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10,000 தனிப்படை


பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வர இன்னும் 6 நாட்களே உள்ள  நிலையில் அதற்காக 10 ஆயிரம் தனிப்படைகளை தமிழக அரசு அமைத்துள்ளது. அதன்படி  ஜன. 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு  அதிகமாக உள்ளது. ெபாதுமக்கள் உணவுப்பொருள் வாங்க செல்லும் போதும், மளிகை  பொருட்கள் வாங்க செல்லும் போதும், துணி, சணல் பைகளை எடுத்துச் செல்வதில்லை.  மாறாக கடைகளில் வாங்கும் பொருட்களை கடைக்கார்ர்களே பிளாஸ்டிக் பைகளில்  போட்டு கொடுக்கின்றனர்.  பிளாஸ்டிக் சீக்கிரம் மக்காத காரணத்தால்  சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள்,  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 ஜனவரி  1ம் தேதி முதல் தமிழகத்தில் பயன்படுத்த தடைவிதித்து, கடந்த ஜூன் 5ம் தேதி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும்  கிளம்பியது.  பிளாஸ்டிக் தடைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதரவு  தெரிவித்தனர். இந்த தடை உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும்  தெரிவித்தனர். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மத்தியில்  கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி இந்த தொழிலில்  முதலீடு செய்துள்ளோம். 2022ம் ஆண்டு தான், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய  அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.  இது மாநில அரசு செயல்படுத்தக்கூடிய  விஷயம் அல்ல. மத்திய அரசு தான் இப்படி ஒரு தடை உத்தரவை வெளியிட முடியும்.  சிறு, குறு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை நசுக்கும் செயல் இது. பன்னாட்டு  கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எந்த  தடையும் விதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை  விதிக்க முடிவு செய்ததற்கு முன், அந்த தொழிலில் உள்ளவர்களிடம் அரசு கருத்து  கேட்டிருக்க வேண்டும். அதே போல் தமிழகத்தில் குறிப்பிட்ட பொருட்களுக்கு  தடை விதிப்பதால் இங்குள்ள சந்தை அழிந்துவிடும். மாறாக வெளிமாநிலங்களில்  இருந்து அதே பொருட்கள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.  தமிழகத்தில் அண்டை மாநிலங்களோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்கள்  வழியாக பிளாஸ்டிக் பை, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள்  உள்ளே கொண்டு வரப்படும் பட்சத்தில் தமிழக அரசு வீடு வீடாக சென்று சோதனை  நடத்துமா, இது சாத்தியமே இல்லை என்று தெரிவித்தனர். பிளாஸ்டிக்  பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அரசின் இந்த முடிவால் தங்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மாற்று தொழிலுக்கு ஏற்பாடுகளை பற்றி அரசு  யோசிக்கவில்லை. இதனால் ஏற்படும் பிரச்னைகள்,  சாதக, பாதகங்களை ஆராயாமல்  அரசு முடிவுகளை எடுக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த  அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி, மாநில அளவில் பிளாஸ்டிக்  உற்பத்தியாளர்களும், வணிகர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில்  பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வருதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளன.  பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் புதிதாக பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி  செய்யவில்லை. ஏற்கனவே உற்பத்தி செய்த பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே,  தற்போது கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  மளிகைக்கடைகளில் பொதுமக்களே பை கொண்டு வந்து பொருட்களை வாங்கும்பட்சத்தில்,  பிளாஸ்டிக் பை வாங்குவதற்காக செலவிடப்படும் ₹1 லட்சம் மிச்சமாகும் என்று  மளிகைக்கடை நடத்துவோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிளாஸ்டிக்  தடை உத்தரவை தமிழக அரசு எவ்வாறு செயல்படுத்தப்போகிறது என்ற கேள்வி  தொடர்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்று களஆய்வு மேற்கொள்ள, 10 ஆயிரம் தனிப்படைகளை  தமிழக அரசு அமைத்துள்ளது. ஒரு தனிப்படைக்கு 5 ஊழியர்கள் வீதம் 50,000 பேர்  இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். உள்ளாட்சி, சுற்றுச்சூழல் துறையை  சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட வாரியாக இதை கண்காணிக்க உள்ளனர். தமிழகத்தில்  ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை  முற்றிலும் ஒழிக்க, இந்த தனிப்படை பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளதாக  கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஜனவரி 1ம் தேதி முதல் அதிரடி சோதனைகள்  தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி