இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2018

இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம், எதிர் நீச்சலடித்து உழைக்க ஊனம் தடையல்ல என மாற்றுத் திறனாளிகள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.
 தொழிலாளி ஜே.அருண்:

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் கவலை கிடையாது என்கிறார் செங்குன்றத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஜே.அருண்(42). இவர் யாரையும் எதிர்பார்க்காமல் தனது பெட்டிக் கடையில் சில்லறை பொருள்கள் விற்பனை, செல்லிடப்பேசி ரீசார்ஜ் செய்து மாதம் ரூ. 3 ஆயிரம் வருவாய் ஈட்டி வருகிறார். அத்துடன், நாற்காலி பின்னுதல் போன்றவை மூலம் கூடுதலாக ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 5 ஆயிரம் சம்பாதிக்கிறார். மேலும், தனது தனித்திறமையால் நிகழாண்டில் மதுராந்தகத்தில் நடந்த தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான போபியோ விளையாட்டுப் போட்டியில் வென்று சுழற்கோப்பை பெற்றுள்ளார்.
 இது குறித்து அவர் கூறியது: என்னைப் பொறுத்தவரையில் கால்கள் ஊனமாகப் பிறந்தாயிற்று. இதற்காக பிறப்பை எண்ணி கவலையடைந்ததும் இல்லை, வீணே முடங்கியும் விடவில்லை. நம்மால் முடிந்த அளவு உழைக்க வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தக் கூடாது என்ற உறுதியோடு வாழ்கிறேன். இதை என்னைப் போன்றவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் செங்குன்றம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளை இணைத்து, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுச் சங்கத்தையும் நடத்துகிறேன். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு முடிந்த அளவுக்கு சலுகைகளை பெற்றுத் தருகிறேன். அத்துடன் யாரையும் சார்ந்து இருக்காத வகையில் கைத்தொழில் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்து வருகிறேன். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான போபியோ விளையாட்டுப் போட்டியில் பயிற்சி பெறுவதற்கு அதற்கான பந்து இல்லை. இந்த விளையாட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே பந்து விளையாடுதல் ஆகும். இப்பயிற்சியைப் பெற அரிமா சங்கத்தில் அனுமதி அளித்துள்ளனர். ஆனால், இதற்கான பந்தின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் ஆகும். இதற்காக மக்களவை உறுப்பினர் வேணுகோபாலிடம் உதவிக்காக அணுகியபோது உதவி செய்வதாக கூறினார். இப்பந்து மூலம் தொடர்ந்து பயிற்சி பெற்றால் எளிதாக வெற்றி பெறமுடியும் என்றார்.
 ஆசிரியை சுகுணாசுந்தரி:

திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டையைச் சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சுகுணாசுந்தரி. இவருக்கு கணவர் முத்துசாமி, பாலிடெக்னிக் படித்து வரும் சூரியன், 9-ஆம் வகுப்பு படித்து வரும் ஸ்டாலின் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர் தற்போது திருவள்ளூர் நகராட்சி க.மு.ந.சகோதரர்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் என்றாலும், திருச்சியில் பிளஸ்2 வரையிலும், சென்னை காயிதே மில்லத் கல்லூரி இளநிலை, முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து திருநின்றவூர் ஜெயா கல்வியியல் கல்லூரியில் பி.எட் படித்துள்ளார். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வில் தேர்ச்சி பெற்ற காரணத்தினால் ஆசிரியை பணி கிடைத்தது. தற்போதைய நிலையில் இவருக்கு திருவள்ளூர் நகராட்சி பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் சமூக அறிவியல் பாடம் கற்பித்து வருகிறார்.

 இவர் கூறியது: நாள்தோறும் பள்ளிக்கு செவ்வாப்பேட்டையில் இருந்து திருவள்ளூருக்கும், இங்கிருந்து பள்ளிக்கும் ஆட்டோவில் உதவியாளர் ஒருவருடன் பயணம் செய்து வருகிறேன். என்னைப்போன்ற பார்வையற்றோருக்கு தன்னம்பிக்கைதான் முக்கியம். மேலும், வகுப்புகளில் பாடம் எடுப்பதற்காக நாள்தோறும் இரவு 10 மணி முதல் 12 மணி வரையிலும், காலையில் 4.30 முதல் 6.30 மணி வரையிலும் பாடம் தொடர்பான ஆடியோ கேட்பேன். அதையடுத்து, பிரெய்லி எழுத்து மூலம் குறிப்புகள் எடுத்து பாடம் நடத்துவேன். நான் இந்த உலகத்தை கண் திறந்து பார்க்கவில்லை என்றாலும், மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்து இந்த உலகத்தையே பார்க்க வைக்கிறேன். இதுவே எனக்கு திருப்தி அளிக்கிறது என்றார்.
 ஆட்டோ ஓட்டும் ஜெகதீசன்:

திருவள்ளூர் அருகே உள்ள வேள்ளேரிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (55). இவருக்கு சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு மனைவி கலைவாணி, மகன் சாய்சரண் ஆகியோர் உள்ளனர். இவர் போலியோவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார்.
 அவர் கூறியது:

சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டதால் கால்கள் ஊனமாகி விட்டன.
 இதனால் இப்பகுதியில் யாருமே பெண் கொடுக்க முன்வரவில்லை. எனினும் மனம் தளராமல் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன். தொடக்கத்தில் சிரமமாக இருந்தது. எனினும், யார் தயவும் இன்றி உழைத்து வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஓட்டிப் பழகினேன். அப்போது, இந்தக் கிராமத்தில் கலைவாணி என்ற பெண் என்னை விரும்பியதால் திருமணம் செய்து கொண்டேன். ஊனம் என்பது உடலில் இருக்கும் குறைபாடே தவிர, மனரீதியாக பெரிய பிரச்னையே கிடையாது. எனது தன்னம்பிக்கையே என்னை வெற்றி பெறச் செய்தது என்றார்.
 டிரம்ஸ் வாசிக்கும் தான்சேன்

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கண்ணன்-நாகஜோதி தம்பதியின் மகன் தான்சேன்(25). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் மணிக்கட்டுக்கு கீழே சிகிச்சையின்போது துண்டிக்கப்பட்டது. எனினும், மனம் தளராத இவர் தொடர்ந்து படித்து பொறியியல் பட்டம் பெற்றார். தற்போது திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் எல்எல்பி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இரு கைகளை இழந்த நிலையிலும் நன்றாக எழுதவும், டிரம்ஸ் வாசிப்பது மற்றும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
 இதுகுறித்து அவர் கூறுகையில், கைகளை இழந்த நிலையிலும், நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை இசைக்குழுவில் டிரம்ஸ் இசைக்கலைஞராக உள்ளேன். நடிகர் ரஜினிகாந்தின் நிகழ்ச்சியில் எங்கள் இசைக்குழு மூலம் டிரம்ஸ் வாசித்துள்ளேன். இதன் மூலம் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரையில் வருவாய் ஈட்டுகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்குள்ளும் தனித்திறமைகள் மறைந்து கிடக்கின்றன. இதை வெளிக்கொண்டு வர முடிந்தளவுக்கு உதவி செய்வதையே விரும்புகிறேன் என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி