போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2019

போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்


போராட்டம் நடத்திவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் (ஜாக்டோ - ஜியோவுடன்) பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. அதேநேரத்தில், அரசு ஊழியர்களின் போராட்டமும் தீவிரமடைகிறது.

மேலும் 6 சங்கங்களும் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த டிசம்பர் 4 முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் (ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இதற்கு தடைகோரி   ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கவில்லையென ஜாக்டோ - ஜியோ தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றம் தொடர்பாக நீதிமன்றம் கடந்த 21.9.2017ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அரசு தரப்பில் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்காததால் தங்கள் உத்தரவாதத்தை ஜாக்ேடா ஜியோ கடந்த 11ம் தேதி திரும்ப பெற்றுக் கொண்டது.

இதனைத்தொடர்ந்து, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தடை கோரிய மனுக்கள், நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில், ஊதிய முரண்பாடு குறித்த சித்திக் கமிஷன் அறிக்கை அடிப்படையில், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘எங்களது ேகாரிக்கையை தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இல்லை. 21 மாத நிலுவை அகவிலைப்படியை வழங்கினால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்’ என கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘ஏற்கனவே உத்தரவிட்டும் அரசும் பிடிவாதமாக உள்ளது. இதில், எப்படி நாங்கள் உத்தரவிட முடியும்’’ என்றனர். பின்னர், போராட்டத்தை முடிவுக்கு ெகாண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக, அரசுடன் ஆலோசித்து தெரிவிக்க வேண்டுமென அரசு தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி சிறிது நேரம் ஒத்தி வைத்தனர்.  இதையடுத்து, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல், தமிழக அரசுடன் ஆலோசித்தார்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜரான அவர், ‘‘தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இப்போதைக்கு வாய்ப்பில்லை’’ என்றார்.

 இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’’ எனக்கூறி மனுக்கள் மீதான விசாரணையை பிப். 18க்கு தள்ளி வைத்தனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு எதிரான இந்த வழக்கில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என அரசுத் தரப்பில் கூறியுள்ளதால், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தீவிரமடைகிறது. இதனால், அரசு பணிகள் முழுமையாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பிரச்னைக்கு தீர்வாகாதுநீதிபதிகள் கருத்து
தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அரசு தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘தற்காலிக ஊழியர்களை நியமிப்பது பிரச்னைக்கு தீர்வாகாது. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களை நியமித்தீர்கள். அவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு தங்களை நிரந்தரப்படுத்தக் கோரி நீதிமன்றத்தை நாடினர். தற்ேபாதும் தற்காலிக ஊழியர்களை நியமிப்பது என்பது வேறு விதத்தில் புதிதாக பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பதே சரியாக இருக்கும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி