தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து மற்றும் மேசைப்பந்து விளையாட்டுப் போட்டி தொடக்க விழா டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி போட்டிகளை தொடக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:விளையாட்டுத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அரசு வேலை வாய்ப்புகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக 24 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கல்லூரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை அரசு தேர்வு செய்து கல்லூரிகளிடம் பட்டியலை வழங்கும்.
அந்த பட்டியலின் அடிப்படையில் சிறந்த விளையாட்டு வீரர்களை கல்லூரி நிர்வாகம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு, கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றை இலவசமாக அளிக்கும்.மேலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியையும் அளிக்கும். இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழகம் விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய சாதனையை புரியும் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ்.சரவணன், தமிழ்நாடுகூடைப்பந்து கழக தலைவர் வி.வி.ராஜ் சத்யன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம்.ராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் அ.மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 21 வயதுக்குள்பட்ட வீரர், வீராங்கனைகள் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 32 அணிகளும் பங்கேற்றுள்ளன. போட்டியில் வெல்லும் சிறந்த அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2 ஆம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ. 50 ஆயிரம்வழங்கப்படுகிறது.
election election election..
ReplyDelete