நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 18, 2019

நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை


தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து வந்தாலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது.

இந்தநிலையில் ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில்கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியானஇரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும். அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும். அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது என்ற தகவல் கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.

இதையடுத்து மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழகத்தில் இந்தப் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல் பரவியது.இதையடுத்து தமிழகத்தில் கட்டாயத் தேர்வு முறையைரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்; இடை நிற்றல் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பொதுத்தேர்வு நடத்துவதா வேண்டாமாஎன்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இருப்பினும் அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டே பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்படவுள்ள தேர்வு மையங்கள், பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு பள்ளியில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் இருந்தால் அங்கு பொதுத்தேர்வு மையம் அமைக்கப்படும்.

பெரும்பாலும் அரசுப் பள்ளிமாணவர்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளிலேயே படித்து வருவதால் தேர்வு மையங்களையும் அதற்கேற்றவாறு அருகில் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த முடிவு கல்வியாண்டின் இறுதியில் எடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பயிற்சி, விழிப்புணர்வு எனஅனைத்து விஷயங்களையும் கொண்டு செல்வதற்கு போதுமான அவகாசம் இல்லையென்பதால் எளிதான வினாக்கள், நெருக்கடியில்லாத மதிப்பீடு போன்றவற்றின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 comments:

  1. பேசாமல் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பொது தேர்வு வைக்கலாமே

    ReplyDelete
  2. Unga puththiyila En................

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி