5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை! - kalviseithi

Feb 21, 2019

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை!


5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
“ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-19ம் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு” என்று, பெற்றோரும் இளம் மாணவ மாணவியரும் அதிர்ச்சிக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் அல்லலுறும் வகையில், அ.தி.மு.க அரசு அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சரம் பிசகாமல் அ.தி.மு.க அரசு செயல்படுத்துவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சராக உள்ள திரு செங்கோட்டையன் ஆகியோரின் “குதர்க்க மனப்பான்மை”யைப் பிரதிபலிக்கிறது.

மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று புதிய கல்விக் கொள்கையை வகுத்த ஈரம் காய்வதற்குள், மத்திய பா.ஜ.க அரசே நினைத்துப் பார்க்காத அவசரத்தில், அதை அ.தி.மு.க அரசு பள்ளிப் பருவத்தில் உள்ள மாணவர்கள் மீது திணிப்பதும், கல்விக்கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் முதல் வகுப்பிலிருந்து இருந்து வேலைக்குப் போகும் வரை பரீட்சை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நெருக்கடியைச் சுமத்துவதும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.

ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களையும், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களையும் “நுழைவுத் தேர்வு” “போட்டித் தேர்வு” “பொதுத் தேர்வு” என்று பலவந்தப்படுத்தி கிராமப்புறக் கல்வியறிவை அப்படியே தகர்த்தெறிந்து விட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசும், அதற்கு தலைஆட்டும் பொம்மை போல் அ.தி.மு.க அரசும் செயல்படுவது மன்னிக்க முடியாத துரோகம். ஏற்கனவே, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று கட்டாய பொதுத் தேர்வுகள் இருக்கின்ற நிலையில், இப்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு என்பது, ஒரு மாணவன் 12 ஆம் வகுப்பு படித்து வெளியில் வருவதற்குள் ஐந்து பொதுத் தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்திற்கும், மன ரீதியிலான துன்பத்திற்கும் தள்ளப்படுகிறான். இந்த பொதுத் தேர்வுகள் பள்ளிப் பருவத்தில் உள்ள மாணவனின் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைப்பதற்குச் சமம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க அரசும் உணரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து கழக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கேள்வி எழுப்பிய போது, “புதிய கல்வித் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் மாநில அரசு பொதுத் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்கும்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் திரு செங்கோட்டையன் உறுதிமொழியளித்தார். சட்டமன்றத்தில் ஒன்றைக் கூறி விட்டு, வெளியில் அதைக் காற்றில் பறக்கவிட்டு, அதற்கு நேர் மாறாக வேறு ஒன்றை அறிவிப்பது இந்த அ.தி.மு.க அரசின் ஆரோக்கியமற்ற சட்டமன்ற ஜனநாயகமாகி விட்டது. அதன் விளைவு- அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், “2018-19ம் கல்வியாண்டு முதல் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்றும், அது தொடர்பான வழி முறைகளையும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு எழுத்து பூர்வமாக சுற்றறிக்கையாக வழங்கி வருகிறார்கள். இதுகுறித்து கேள்வி எழுப்பினால் “பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்னும் அரசாணை வெளியிடவில்லை” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் இன்று காலையில் கோபிச்செட்டி பாளையத்தில் ஏதும் அறியாதவரைப்போல பேட்டியளித்திருக்கிறார்.

இந்த அரசாங்கத்தில் என்னதான் நடக்கிறது? அரசாணை இல்லாமல் - அரசு பொதுத்தேர்வு குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்காமல் முதன்மை கல்வி அலுவலர்கள் எப்படி “பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்று ஒரு சுற்றறிக்கை அனுப்ப முடியும்? எடப்பாடி திரு பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு “கோமாளித்தனமான அரசு” என்பதற்கும், அரசு என்ற போர்வையில் மனம்போன போக்கில் “துக்ளக்” தர்பார் நடத்துகிறார்கள் என்பதற்கும் இதை விட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டம் என்பது ஏதோ டெண்டரில் அ.தி.மு.க அமைச்சர்கள் கமிஷன் அடிப்பது போன்றது அல்ல என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். கல்வியாளர்களையும், பெற்றோர்களையும்- ஏன் மாணவர்களையும் கூட கலந்து ஆலோசித்து மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை அரை வேக்காட்டுத்தனமாக - அவசர கோலத்தில் எடுப்பது பல தலைமுறைகளை பாதித்து விடும். ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசின் “காவிமய கல்வி” மற்றும் “சமூக நீதி” மற்றும் “கிராமப்புற மாணவர்களை” பாதிக்கும் நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடி, கையைக் கட்டிக் கொண்டு, ஆமாம் சாமி போட்டு ஒத்துழைப்பதை அ.தி.மு.க அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு, மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும்; கைவிட்டு, அதுகுறித்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

7 comments:

 1. Why dmk opposing all type of exam what is intension beyond to this ?

  ReplyDelete
 2. Ippadiyee thaana mummozhi kalvi thittathai tamil natuku varavidaama panninga

  ReplyDelete
 3. Don't comment on DMK because all Teachers [Jacto-Gio] will get angry.....(:-(

  ReplyDelete
 4. Pg Trb commerce friends nala padinga 9952636476

  ReplyDelete
 5. Why commerce friends nalla padinga nu appram other major friends paddika vendama

  ReplyDelete
 6. Commerceku mattum than trb call for panna porangala

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி