இன்று தமிழக பட்ஜெட்: ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்செய்கிறார் - பல புதிய திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 8, 2019

இன்று தமிழக பட்ஜெட்: ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்செய்கிறார் - பல புதிய திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு


தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2019-2020ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 2ம் தேதி தொடங்கியது.ஆண்டின் முதல் நாள் கூட்டம் என்பதால் அன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

பின்னர் 3ம் தேதி திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜனவரி 4, 5, மற்றும் 7, 8 ஆகிய நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 8ம் தேதி (இன்று) நடைபெறும் என்றுசட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டம், தொடங்கியதும் காலை 10 மணிக்கு 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

துணை முதல்வர் பட்ஜெட்டை வாசித்து முடித்ததும், இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிவடையும். பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடத்த சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனைநாட்கள் நடத்தலாம் என்று விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.அதன்படி, நாளை, 9ம் தேதி (சனிக்கிழமை), 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் பேரவைக்கு விடுமுறையாகும். தொடர்ந்து 11ம் தேதி (திங்கள்) முதல் 15ம் தேதி வரை (5 நாட்கள்)பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து நடத்தப்படும் துறை வாரியான மானிய கோரிக்கை கூட்டம் வழக்கமாக ஒரு மாதம் நடைபெறும். ஆனால், இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.அதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் ஜூன் மாதம் மானிய கோரிக்கை மற்றும் வாக்கெடுப்புக்கான கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.

இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தமிழக அரசின் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதால், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், மத்திய அரசு கடந்த 1ம் தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல அறிவிப்புகளை வெளியிட்டது.  அதேபோன்று, இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக அரசின் பட்ஜெட்டிலும் மக்களுக்கு பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, பல புதிய அறிவிப்புகள் மற்றும் புதிதாக பல இலவச திட்டங்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் விவகாரம், தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை, மேகதாது விவகாரம், ஸ்டெர்லைட் விவகாரம், கொடநாடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவை கூட்டத்தில் பிரச்னையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விறுவிறுப்பாகவும், அனல் பறக்கும் விவாதத்திற்கும் பஞ்சம் இருக்காது.

இது 8வது முறை சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் 2019-2020ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஓ.பன்னீர்செல்வம் இன்று 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி