School Morning Prayer Activities - 13.02.2019 ( Kalviseithi's Daily Updates... ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2019

School Morning Prayer Activities - 13.02.2019 ( Kalviseithi's Daily Updates... )


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 129

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

உரை:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

பழமொழி:

Hunger breaks stone walls

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்

பொன்மொழி:

ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.

- அரிஸ்டாட்டில்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
அரிசி

2) வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
ஆறுகள்

நீதிக்கதை :

ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.

காஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?” என்று கேட்டது.”

ஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.

“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.

அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.

ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.

“அரசனுக்கு காஹா ஏன் தேவை?” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”

அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?” என்று கேட்டான்.

இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.

தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.

அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.

மீனவன் “காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.

அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.


அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.


இன்றைய செய்தி துளிகள் : 

1) மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் - மர வளத்தை பெருக்க தமிழக அரசு புதிய திட்டம்!

2) உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணிநியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

3) கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: ட்ராய் அறிவிப்பு

4) டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு

5) சுவிட்சர்லாந்தை சேர்ந்த  எப்சி பாஸல் அணி, திறமையான இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் கோவையில் கால்பந்து பயிற்சி அகடமியை தொடங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி