School Morning Prayer Activities - 19.02.2019 ( Kalviseithi's Daily Updates... ) - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 19, 2019

School Morning Prayer Activities - 19.02.2019 ( Kalviseithi's Daily Updates... )


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

உரை:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

பழமொழி:

It is easier to destroy than to create

அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்

பொன்மொழி:

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.

- புத்தர்

இரண்டொழுக்க பண்பாடு :

1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.

2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொது அறிவு :

1) காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?
தேனிரும்பு

2) இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ?
உத்திரபிரதேசம்

நீதிக்கதை :

சொர்க்கத்தீவு 

சொர்க்கத்தீவு என்று ஒரு தீவு இருந்துச்சாம். அந்த தீவுக்குச் சென்று அதன் கொள்ளை அழகைக் கண்டு இரசிக்கவேண்டுமென்று
பலருக்கும் ஆசை...
ஒரு குழு அந்த தீவை எப்படியும் அடைந்துவிட வேண்டுமென்ற வேட்கையில் புறப்பட்டது.. குழுவில் பலருக்கும் அந்த தீவை அடைவது வாழ்நாள் கனவும்கூட...

தீவுக்குச் செல்ல அந்தக்குழு பல வருடங்கள் உழைத்து மிகப்பெரிய, வலிமையான படகு ஒன்றை தயார் செய்தது. அந்த உறுதியான படகு ஒருசில வழிகாட்டிகளுடன்,  சிலநூறு பேர்களை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட நாளில் சாதகமான வானிலையின்போது  புறப்பட்டது...

பயணம் சிறப்பாகத் தொடங்கியதும் அவர்களுடைய  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தங்களுடைய நீண்டநாளைய கனவு நனவாகப் போவதை எண்ணி எண்ணி உற்சாகத்துடன் சில நாட்களும் நகர்ந்து. திடீரென ஒருநாள் அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது, படகை தொடர்ந்து இயக்க எரிபொருள் இல்லையென்று..!

இனி படகை துடுப்புகள் கொண்டுதான் இயக்கவேண்டும். அந்த உடல்பெருத்த படகை துடுப்புகள் கொண்டு இயக்க சிலநூறு கைகள் வேண்டும்... அக்குழுவின் அத்தனை கைகழும் ஒன்றுபட்டு துடுப்புப்போட்டு படகை இயக்கியது. படகு மெல்லமெல்ல நகரத்தொடங்கியது...

நாட்கள் சென்றது... அவர்களிடம் இருந்த உணவும், நீரும் வெறுங்குவளைகள் ஆயின. நாளுக்கு நாள் குழுவுக்குள் பதட்டமும்  அதிகரித்தது. நாக்கு வறண்டது, காதுகள் அடைத்தது...
யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை, அவர்கள் உடலில் நீர்ச்சத்துக்கூட நீர்த்துப்போனது.  களைத்துப்போய் சலனமற்று கிடந்தார்கள். அன்று இரவு முழுவதும் மிகப்பெரிய சூறாவளி, காற்று சுழன்று சுழன்று அடித்தது அவர்கள் மனதுக்குள். பயம் அவர்களை நிரந்தரமாக  கவ்விக்கொண்டது.
கடலில் வீசும் சிறிய அசைவுகள்கூட அவர்களை அச்சுறுத்தியது...

மறுநாள் அதிகாலை பனித்திரை விலகியதும், எதிரில் பேரழகை சூடிக்கொண்டு, வானுயர்ந்த மலைகளோடு அந்த சொர்க்கத்தீவு அவர்களுக்கு எதிரில் வெகுதொலைவில் இவர்கள் வருகைக்காக காத்து நின்றது...

ஆனால் அதை அடைவதற்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம்! கண்ணுக்கெதிரே இலக்கு இருந்தது. திடீரென கடலின் பேரிரைச்சல், அவர்களை அசைத்துப் பார்த்தது..!
கேக்கும்திறன் குறைந்துவிட்ட  அவர்களின் காதுகளில் அந்த பேரிரைச்சல் படகு ஓட்டை, படகு ஓட்டை என்ற அபாய ஒலியாக கேட்டது.. உள்ளத்தில் பயம் பற்றிக்கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தார்கள் எதுவுமில்லை. ஆனால் சத்தம் மட்டும் அவர்களுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. வழிகாட்டிகள் அனுபவமுள்ளவர்கள், இது பெருங்கடலின் வெற்றுக் கூச்சல்கள் யாரும் பதட்டமடையத் தேவையில்லையென்று எச்சரித்தும் யாரும் அதற்கு உடன்படவில்லை.  அவர்களுக்குத் தெரியவில்லை, படகில் உள்ளவரைதான் அவர்களுக்கு பாதுகாப்பென்று...
உயிர்பயம் அவர்களை படகிலிருந்து விரட்டியது.. படகிலிருந்து ஒருசிலர் குதித்தார்கள். வழிகாட்டிகள் கதறினார்கள், இச்செயல் தற்கொலைக்கு சமம், இப்பொழுதுதான் நாம் பதட்டமில்லாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டுமென்று...
எதுவும் அவர்களின் செவிகளில் ஏறவில்லை. மேலும் சிலர் படகிலிருந்து குதித்தார்கள்.
அதைக்கண்ட அந்த மந்தைக் கூட்டம், கூட்டம் கூட்டமாக குதித்தன. கடல் தன்னுடைய அசுர வாயை, அதிகார வாயைத் திறந்து உள்ளே விழுங்கிக் கொண்டது... அந்த தருணத்திற்காகவே காத்திருந்த அந்த வெள்ளை சுறாக்கள் அவர்களை நீலக்கடலுக்குள் இழுத்துச் சென்றது...

படகிலே ஒருசிலரே மிஞ்சியிருந்தார்கள். அப்பெரிய படகை இவர்களின் ஒருசில கைகளால் இம்மி அளவிற்கும் நகர்த்த முடியாது.  கண்ணுக்கெதிரே இலக்கு தெரிகிறது!
படகு நிறைய துடுப்புகள் இருக்கிறது, இருந்தும் அவற்றை இயக்க இன்னும் சிலநூறு கைகள் தேவை. அக்கைகள் இனி அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை, நீந்திக்கடக்க அவர்களின் உடலில் ஆற்றலும் இல்லை.

அவர்கள், இவர்களை  தனிமரம்போல நிற்கதியாக விட்டுச்சென்றதைப் போல உணர்ந்தார்கள்..
இயலாமை அவர்களை வாட்டியது. இறந்தவர்களின்  அறியாமை அவர்களை கலங்கச் செய்தது. பசியும், தாகமும் அவர்களைப் பிச்சி தின்றது...

கடலில் குதிப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர்களுக்குத் தெரியும். அதே படகிலே இறந்து தங்கள் உடல் நீரிலும், காற்றிலும் அழுகி, புழுபுழுத்து முடை நாற்றமெடுக்க, அதை கடல்பறவைகள் கொத்தி கிழித்து சிதறடிக்க விரும்பாதவர்களாய் அதே கடலுக்குள் அவர்களும்  அமிழ்ந்துபோனார்கள். இறந்துபோனவர்களுக்காக அவர்கள் சிந்திய கடைசித்துளி கண்ணீரும் அந்த கடலுப்போடு கலந்துபோனது...

இறுதியாக அவர்களையும்  உள்வாங்கிக் கொண்டு அந்த அசுரக்கடல், அதிகாரக்கடல்  பேரிரைச்சலோடு எக்காலமிட்டது...


இன்றைய செய்தி துளிகள் : 

1) உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - உயர் கல்வித்துறை அமைச்சர்

2) நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை

3) வரும் கல்வியாண்டு முதல், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள், யோகா பயிற்சிகள் - அமைச்சர் செங்கோட்டையன் 

4) ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை..... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

5) புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி