தடையில்லா சான்றிதழ் கட்டணத்தை ரூ.80 ஆயிரமாக உயர்த்தியது எம்ஜிஆர் பல்கலை.- மாணவர்கள் அதிர்ச்சி - kalviseithi

Mar 14, 2019

தடையில்லா சான்றிதழ் கட்டணத்தை ரூ.80 ஆயிரமாக உயர்த்தியது எம்ஜிஆர் பல்கலை.- மாணவர்கள் அதிர்ச்சி


முதுகலை மருத்துவப் படிப்புக்கான தடையில்லா சான்றிதழ் கட்டணத்தை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் பிளஸ் 2 முடித்து மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் தகுதி பெற்று பிலிப்பைன்ஸ், ரஷ்யா,சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கின்றனர். அங்கு படிப்பு முடித்து இந்தியா வருபவர்கள், தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் எஃப்எம்ஜிஇ என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும் என்ற நடைமுறை உள்ளது.வெளிநாடுகளில் இளநிலை மருத்துவம் முடித்தவர்கள், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவம் படிக்க தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதற்கு ரூ.12,100 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.80 ஆயிரமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பு படித்தவர்கள், முதுநிலைமருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க தடையில்லா சான்றிதழ் பெற வேண்டாம். ஆனால், தனியார் மருத்துவப்பல்கலைக் கழகங்களில் இளநிலை மருத்துவப் படிப்பு படித்திருந்தால் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.1,600 செலுத்தி தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதேநேரத்தில் வெளிநாடுகளில் இளநிலை மருத்துவப் படிப்பு முடித்தவர்கள், தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கான ரூ.12,100கட்டணம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ரூ.80 ஆயிரமாக பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.டாக்டர் கனவோடு இருப்பவர்களுக்கு இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால்தான்,வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர். எனவே,பல்கலைக்கழகம் வியாபாரநோக்கத்தோடு செயல்படக்கூடாது.

விண்ணப்பிக்காமல் உள்ளனர்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. தடையில்லா சான்றிதழுக்கான கட்டணம் அதிகஅளவில் உள்ளதால், வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் விண்ணப்பிக்காமல்உள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி தடையில்லா சான்றிதழ் கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி