முதுநிலை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - kalviseithi

Mar 11, 2019

முதுநிலை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


எதிர்வரும் கல்வியாண்டுக்கான (2019-20) முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை (மார்ச்11) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திங்கள்கிழமை காலை 10 மணி முதல் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களைதரவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, ஆன்லைன் வாயிலாகவே வரும் 20-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குநரகத்திலோ அல்லது மருத்துவக் கல்லூரிகளிலோ நேரடியாக விண்ணப்பங்களைப் பெற இயலாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தற்போதைய நிலவரப்படி 1250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. அதில், அதிகபட்சமாக சென்னை மருத்துவக்கல்லூரியில் 213 இடங்கள் உள்ளன. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 152 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 134 இடங்களும் இருக்கின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கு கூடுதலாக 157 இடங்களை ஒதுக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வலியுறுத்தியது.அதன் அடிப்படையில் தற்போது 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

இதற்கு நடுவே, பல ஆண்டு காலமாக இருந்துவரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.

இதையடுத்து, எதிர்வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரிக்க உள்ளது. இதன் மூலம், நாட்டிலேயே அதிக மருத்துவ மேற்படிப்பு இடங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி