TOUR PLAN - கன்னியாகுமரியில மூலை முடுக்கெல்லாம் சுத்தலாம் வாங்க! - kalviseithi

Mar 26, 2019

TOUR PLAN - கன்னியாகுமரியில மூலை முடுக்கெல்லாம் சுத்தலாம் வாங்க!

ஏப்ரல் 13 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.அதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த இடத்துக்கு கூட்டிச் செல்லலாம் என திட்டமிடவே இந்த பதிவு.

சுற்றுலா போகலாம் வாங்க :

கன்னியாகுமரியில மூலை முடுக்கெல்லாம் சுத்தலாம் வாங்க! தெளிவான திட்டம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், விவேகானந்த கேந்திரம் , விவேகானந்தர் பாறை, மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், அய்யன் திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், கன்னியாகுமரி, சுசீந்திரம், தேரூர் பறவைகள் சரணாலயம், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் , நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, சிதறால் சமண நினைவு சின்னங்கள், மாத்தூர் தொட்டிப் பாலம், உதயகிரிக் கோட்டை, உலக்கை அருவி, பேச்சிப்பாறை அணைக்கட்டு, பெருஞ்சாணி அணைக்கட்டு , முக்கடல் அணைக்கட்டு, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, சொத்தவிளை கடற்கரை, முட்டம் கடற்கரை, தேங்காய்ப்பட்டணம் கடற்கரை, ஆலஞ்சி கடற்கரை இத்தனை இடங்கள் இருக்கு கன்னியாகுமரியில. எல்லா இடத்துக்கும் போயிருக்குறீங்களா நீங்க.. வாங்க சூப்பரான சுற்றுலா திட்டம். அருமையான பயணத்துக்கு நீங்க ரெடியா?

கன்னியாகுமரி-  நாள் 1

செல்லும் இடங்கள்  செய்யவேண்டியவை

வழக்கமாக கன்னியாகுமரி செல்பவர்கள் செல்லும் குமரி அம்மன் கோவில், விவேகானந்த பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், கன்னியாகுமரி கடற்கரை ஆகிய இடங்களுக்கு முதல் நாளை ஒதுக்கிவிடுவோம். இரண்டாம் நாள் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் சில திட்டமிடல்களையும் நிகழ்த்தவேண்டியிருக்கும்.

காலை 9 மணிக்கு நம் திட்டப்படி பயணம் தொடங்கும். இரவு 10 மணிக்கு முன்பு சுற்றுலா முடிந்துவிடும். மீண்டும் அடுத்தநாள் சுற்றுலாவைத் தொடரலாம். அதன்படி பார்த்தால் மூன்று நாள்கள் நீங்கள் கன்னியாகுமரியில் தங்கி முழு சுற்றுலாவையும் அனுபவிக்கலாம்.

ஒரே நாளில் குமரி சுற்றுலாவை முடிக்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இதைப் படித்து பயன்பெறுங்கள். மேலும் அடுத்த இரண்டு நாள்களும் சுற்றுலா செல்லதிட்டமிட்டால் காத்திருங்கள். இந்த பதிவிலேயே முழு சுற்றுலாவையும் தெரிந்து கொள்வோம்.

செயல் திட்டமும் செல்லும் இடங்களும்

திட்டம் இதுதான். காலை உணவை முடித்துக்கொண்டு 9 மணிக்கு கடற்கரைக்கு செல்கிறோம். சிறிது நேரம் நின்றுவிட்டு, அருகில் இருக்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் கடற் பயணத்துக்கான அனுமதி கட்டணம் செலுத்தி சீட்டு பெற்று, கடலுக்குள் பயணிக்கவிருக்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் ஒரு விசயத்தை முடித்து விடலாம். அதுதான் கோவிலுக்கு செல்வது. கோவிலுக்கு சென்று திரும்பியதும் விவேகானந்த பாறை, திருவள்ளுவர் சிலை, மீண்டும் கடற்கரையில் சிறிய உலா என காலை செயல் திட்டம் மதியம் 1 மணி வரைக்கும் நீளும்.

காலை 9 மணிக்கு முன்னர் - காலைச் சிற்றுண்டி

காலை 9 மணி - பகவதி அம்மன் கோவில்

காலை 10. 30 மணி - பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்

நண்பகல் 12.30 மணிக்குள் விவேகானந்த பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் திரும்பி வந்ததும் மீண்டும் கடற்கரை உலா என இந்த திட்டத்தை செயல்படுத்தலாம்.

காலைச் சிற்றுண்டி

காலையில் சிற்றுண்டிக்கு என அநேக தெருமுனைக் கடைகள் இருக்கின்றன. நடுத்தர வர்க்கத்து மக்கள் பெரும்பாலும் இதுபோன்ற கடைகளையே நாடுகின்றனர். அவர்கள் தரும் உணவின் சுவை ஒருபுறமும், அதன் விலை மறுபுறமும் காரணங்களாய் இருக்கின்றன.

உங்கள் வசதிகளுக்கு ஏற்றார் போல நட்சத்திர விடுதிகளும், ரெஸ்ட்ரான்ட்களும் கன்னியாகுமரி கடற்கரைகளிலேயே அதிகம் காணமுடியும்.

பகவதி அம்மன் கோவில்

கேரள அமைப்பில் கட்டப்பட்டிருந்தாலும், கொஞ்சம் தமிழகத்தின் சாயலும் அதில் தெரியும். சக்தி வாய்ந்த அம்மனாக பக்தர்களால் நம்பப்படுகிறது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் பாதிக்கு பாதி பேர் மத, இன வேறுபாடுகள் இல்லாமல் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். எனினும் கோவிலுக்குள் சட்டையை கழற்றச் சொல்வது, நவீன உலக உடைகள் அனுமதி மறுப்பது உள்ளிட்ட நம்பிக்கை தொடர்பான கோவில் கட்டுப்பாடுகள் காரணமாக சிலரை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை.


பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்

இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் கடற்பயணம் மேற்கொள்வது அநேகம் நபர்களுக்கு அனுபவம் இல்லாத நிகழ்வுதான். ஆனால் கன்னியாகுமரிக்கு வரும் மக்களில் 80 சதவிகித சுற்றுலாப்பயணிகள் இந்த கடற்பயணத்தை மேற்கொள்கின்றனர். திருவள்ளுவர் சிலை, விவேகானந்த பாறை ஆகியவற்றின் சிறப்பை கண்டு களித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி -

மதியம் 1 மணிக்கு பிறகு சுற்றுலா
நீங்கள் ஒரு நாள் பயணமாக சுற்றுலா வருவதாயின் அறை எடுத்து தங்க தேவையில்லை. மூன்று நாட்களுக்கு சுற்றுலா வருவதென்றால் அறை எடுப்பது அவசியம். அது பற்றி இதே கட்டுரையின் பிற்பகுதியில் சொல்லியிருக்கிறோம்.

மதிய உணவுக்கு நீங்கள் அறைக்கு சென்று சாப்பிட்டாலும் சரி, இல்லை உயர்தர சைவ மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கும் நிறைய உணவகங்களும் இங்கு கிடைக்கின்றன. அதுமட்டுமில்லாம் சிறிய வகை உணவு விடுதிகளும் குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகின்றன.

மதியம் 1 மணிக்கு உச்சி வெய்யில் மண்டையை பிளக்கும். அந்த சமயங்களில் வெளியில் சுற்றுவது என்பது கொஞ்சம் எரிச்சலான விசயமாகவே இருக்கும். ஆனால் கடற்கரையில் விளையாட விரும்புவர்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கொஞ்சம் ஆன்மீக ஆர்வம் உடையவர்கள் பாரதமாதா கோவில், காந்தி மண்டபம், காமராசர் மண்டபம், நூலகம் என இந்த நேரத்தில் செல்வது கொஞ்சம் பயனுடையதாக இருக்கும். மதிய வேளைகளில் கூட்டம் அதிகம் இல்லாமல் இருக்கும் என்பதால் இதை பரிந்துரைக்கிறோம்.

கடற்கரையும் வேண்டாம், ஆன்மீகமும் வேண்டாம் என்கிறீர்களா? வாருங்கள் இருக்கவே இருக்கு பேவாட்ச்

பேவாட்ச் - பொழுதுபோக்கு கேளிக்கை பூங்கா

எங்கே இருக்கு - கன்னியாகுமரியிலிருந்து கோவளம் நோக்கி செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவிலேயே அமைந்துள்ளது இந்த பேவாட்ச்.

நேரம் காலம்

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதலாக அரை மணி நேரம் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கட்டணம் - பெரியவர்களுக்கு 600 ரூபாயும், சிறிவர்களுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது

9 டி தியேட்டர் ஒன்றும் இங்கு உள்ளது. அதற்கு 120ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சரி எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு வர எப்படியும் சாயங்காலம் ஆகிடும். அப்றம் ஷாப்பிங்க் முடிச்சிட்டு இன்றைய சுற்றுலாவ நிறைவு செய்வோம்.

முதல் நாள் சுற்றுலா நிறைவு  ஷாப்பிங்

அடுத்த நாள் திட்டங்கள்
கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டி நிறைய இடங்களில் ஷாப்பிங்க் கடைகள் இருக்கும். எதை வாங்குவது எதை விடுவது என்பதே தெரியாத அளவுக்கு பொருள்களை கொட்டி வைத்திருப்பார்கள்.

சீசன் நாட்களில் இங்கு நீங்கள் வருகை தந்தால் மூன்று இடங்களில் இந்த கடைத்தெருக்களை காணலாம்.

1. கடற்கரை சாலை ரவுண்டானா

2. காந்தி மண்டபம் அருகில்

3.சூரிய மறைவு காணும் இடத்துக்கு செல்லும் வழியில்

இரவு நேரங்களில் கடற்கரைக்கு அருகிலேயே ஷாப்பிங்க் செய்வது சிறந்தது. காவல் துறையினர் இருந்தாலும் பாதுகாப்பில்லாத உணர்வு வரும் பட்சத்தில் தனியே வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.

முதல் நாள் சுற்றுலாவை இங்கு நிறைவு செய்கிறோம். நீங்கள் ஒரே நாளில் சுற்றுலாவை முடித்துவிட்டு கிளம்ப எத்தனித்தால் இங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் ரயல் நிலையமும், பேருந்து நிலையமும் இருக்கின்றன.

ஷாப்பிங்கை தொடர்ந்து அடுத்த நாள் திட்டங்களையும் போட்டு வைப்போம்.

நாள் 2  செல்லவேண்டிய இடங்கள்  செய்யவேண்டியவை

இரண்டாம் நாள் காலையில் 7 மணிக்கெல்லாம் தயாராகிவிடுங்கள். காலை உணவுக்கு முன் நாம் பயணிக்கவேண்டும். முதலில் நாம் செல்லவிருப்பது சுசீந்திரம் எனும் ஊருக்கு. பின் அங்கிருந்து உலக்கை அருவிக்கு சென்று நாகர்கோவில் வழியாக உதயகிரி கோட்டைக்கு பயணிக்கிறோம். இறுதியாக மண்டைக்காடு சென்று மீண்டும் கன்னியாகுமரிக்கு திரும்புகிறோம். அல்லது கன்னியாகுமரியில் நீங்கள் தங்கியிருக்கும் விடுதியை வெக்கேட் செய்துவிட்டு நாகர்கோவில் அருகே தங்கிக்கொள்ளலாம்.

நாம் இப்போது சுசீந்திரம் நோக்கி பயணிக்கிறோம். இங்கு செல்ல கன்னியாகுமரியிலிருந்து அரை மணி நேரம் ஆகின்றது. நகரப் பேருந்தில் என்றால் கூடுதலாக பத்து நிமிடங்கள். 7.30 முதல் 8 மணிக்குள் சுசீந்திரம் கோவிலுக்கு வந்துவிடலாம். அதன்பின் காலை உணவு, அதைத்தொடர்ந்து அருகிலுள்ள தேரூர் பறவைகள் சரணாலயம் சென்று காலை 11 மணிக்கெல்லாம் நாகர்கோவில் நகரத்துக்குள் சென்றுவிடவேண்டும்.

சுசீந்திரம் நகரில் தாணுமாலையன் கோவில் உள்ளது. அது மிகவும் சிறப்புமிக்கது.


இங்கு அருகிலேயே சில உணவகங்கள் கண்ணுக்கு தென்படும். இங்கு மிகவும் சுவையான உணவு கிடைக்கும். மேலும் இது தமிழ்நாடு, கேரள சுவைகளை கலந்தார்போல இருக்கும். இந்த அனுபவத்தை நீங்கள் கட்டாயம் அனுபவித்த பார்க்கவேண்டும்.

தேரூர் பறவைகள் சரணாலயம்

சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சுசிந்திரம் குளம் மற்றும் தேரூர் குளம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை 47-ன் அருகே அமைந்துள்ளது. இது மத்திய ஆசியாவின் தென்கோடி எல்லையில் அமைந்துள்ளதால் இடம்பெயர் பறவைகளுக்கு முக்கியமான இடமாகும்.

மதியம் 11 மணிக்கெல்லாம் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிடும். அதைப் பொறுத்துக்கொள்ளவும் ஒரு மனம் வேண்டும். சிலருக்கு அது பிடிக்காது. எனவே எங்கேயாவது குளிர்ச்சியான பயணம் மேற்கொள்ள நினைப்பார்கள். அப்படி ஒரு இடமும் நமது பயணத் திட்டத்தில் இருக்கிறது. உலக்கை அருவி தான் அது.

உலக்கை அருவி

இங்கு செல்ல பெரும்பாலானோர் நாகர்கோவில் நகர சாலையைப் பயன்படுத்துவார்கள். நாம் வேறு ஒன்றை அறிமுகம் செய்கிறோம். நகர சாலை இந்த நேரங்களில் சற்று நெரிசலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் குறுகலான சாலை நம் பயணத்தை தடை செய்து நேரத்தை நீட்டிவிடக்கூடும். அதற்குதான் இந்த ஏற்பாடு.

தேரூரிலிருந்து 21 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த உலக்கை அருவி. சில சமயங்களில் இங்கு நீர் இல்லாமல் இருக்கும். விசாரித்துவிட்டு செல்வது சிறந்தது. நெடுமங்காடு நெடுஞ்சாலை, பெருதலைக்காடு சாலை வழியாக பயணித்தால் உலக்கை அருவியை எளிதில் அடைந்துவிடமுடியும். 45 நிமிடங்கள் பயண தூரமாகும்.

ஒருவேளை நீங்கள் மதிய வேளைகளில் அருவிக்கு செல்ல விருப்பப்படவில்லை என்றால், திட்டத்தில் சிறிய மாற்றத்துடன் நாகராஜா கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு சில நேரங்களில் தரிசனத்தை முடித்து விட்டு, உணவு இடைவேளைக்கு செல்லுங்கள்.

மதியத்துக்கு பிறகு மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகியவற்றுக்கு சென்று அன்றைய நாள் சுற்றுலாவை இனிதே நிறைவு செய்வோம். மூன்றாம் நாள் சுற்றுலாவை பின்னர் திட்டமிடுவோம்.

இறுதி நாள் சுற்றுலா  செல்லவேண்டிய இடங்கள்  செய்யவேண்டியவை

மூன்றாவது மற்றும் இறுதி நாள் சுற்றுலா நமக்கு சில வரலாறுகளை தெரிய வைக்கப் போகிறது. ஆம். திருவிதாங்கூர் சமஸ்தான வரலாற்றையும் அதோடு தொடர்புடைய சில இடங்களையும், அதைச் சுற்றியுள்ள வேறு சில இடங்களையும் நாம் காணப்போகிறோம்.

காலை 9 மணி

உதயகிரிக் கோட்டை

சுமார் 81 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையைச் சுற்றிலும் 16 அடி உயர கருங்கல் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை உருவான வரலாறு மிக சுவாரஸ்யமானது.

பகல் 11 மணி

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனையை கி. பி.1601'இல், திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. முதலில் தாய்க் கொட்டாரம் மட்டும் இருந்திருக்கிறது. பின், நூறு வருடம் கழித்து, அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்ற மன்னர், இந்த அரண்மனையை விரிவுபடுத்தினார்.

பகல் 12 மணி

திற்பரப்பு அருவி

திற்பரப்பு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். இங்கு இருக்கும் நீர்வீழ்ச்சி புகழ்வாய்ந்தது. திருவட்டாறில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நீர்வீழ்ச்சி, சுற்றுப்புறத்தை கண்கொள்ளா காட்சியாக மாற்றியமைக்கின்றது.

உணவு இடைவேளை

மாலை 3 மணியிலிருந்து வரிசையாக

மாத்தூர் தொட்டிப் பாலம்

மாத்தூர் தொங்கு பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. உண்மையில் இது நீரை எடுத்துசெல்ல உதவும் ஒரு குழாய். இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. அருகாமையில் இருக்கும் மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்

திருவட்டாறில் இருக்கும் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் 108 திவ்யதரிசனங்களுள் ஒன்று. இதன் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்.

கோதை, பாரலீ மற்றும் தாமிரபரணி ஆகிய மூன்று நதிகளுக்கு நடுவே எழில்மிகும் நிலப்பரப்பில் இக்கோவில் அமைந்து இருக்கிறது. இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் சிவபெருமானும், ஆதிகேசவபெருமாளும் ஆவர்.

சிதறால் சமண நினைவு சின்னங்கள்

சித்தாறல் என்ற சின்ன கிராமம் கன்னியாகுமரியிலிருந்து 45 km தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். இதிலுள்ள மலைக்கோயிலும் ஜெயின் நினைவுச் சின்னங்களுமே இந்த ஸ்தலத்தின் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன.


எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, திரும்ப அறைக்கு சென்று உங்கள் சொந்த ஊருக்கு செல்லதயாராகலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி