மாநில கல்வித்துறை அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2019

மாநில கல்வித்துறை அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.


மாநில கல்வித்துறை அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் மாநில கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்டு, மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ பள்ளிகளையும் தொடங்க அனுமதி கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் பழனியப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழக அரசு கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.மாநில அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழக பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ பள்ளிகளையும் தொடங்க அனுமதிஅளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி பழனியப்பன் மீண்டும் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில், “தமிழக பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கக்கூடாது என சட்ட விதிகள் இல்லை. 2 பள்ளிகளுக்கும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா, பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்றுதான் பார்க்க வேண்டும். ஆனால் மாநில பாட திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி மறுத்து அரசு உத்தரவிட்டு இருப்பது சட்டவிரோதமானது’ என கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, இதுதொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் மத்திய அரசின் சிபிஎஸ்இ தலைவர் உள்ளிட்டோர் வரும் ஜூன் 6-க்குள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி