ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் அளிக்க உத்தரவிடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2019

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் அளிக்க உத்தரவிடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் அளிக்க உத்தரவிடக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருந்ததாவது:

"கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் தகுதிச்சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 150 மதிப்பெண்களுக்கான தேர்வில் பிரதான பாடத்தில் இருந்து 30 சதவீத கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறது. எஞ்சிய கேள்விகள்பொதுஅறிவு, திறனறிவு தொடர்பாக உள்ளது.இதனால் பிரதான பாடத்திற்கான கேள்விகளுக்கு சரிவர பதில் அளிக்காதவர்கள் கூட குறைந்தபட்ச மதிப்பெண்ணான 90-ஐப் பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. இந்த தேர்வுகளும் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.இந்நிலையில், இந்தாண்டு வரும் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவுள்ளது. அதேபோல, தேசிய அளவில் நடத்தப்படும் நெட் மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் போன்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தரமாக சான்று வழங்கும்போது தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மட்டும் 7 ஆண்டுகளை நிர்ணயம் செய்வது என்பது சட்டவிரோதமானது.எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கும் நிரந்தர சான்றிதழ் அளிக்க தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என அதில் கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பிரதான பாடத்தில் கட்டாயம் இவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயம் செய்யாவிட்டால் பிரதான பாடத்தில் எந்த மதிப்பெண்ணும் எடுக்காதவர்களும் கூட அந்த பாடங்களுக்கு ஆசிரியர்களாகி விடுவர். ஸ்லெட், நெட் தேர்வுஎழுதி ஒருமுறை தேர்ச்சி பெற்றுவிட்டால் அதன் செல்லுபடிதன்மை ஆயுட்காலம் வரை தொடர்கிறது. அதேபோல ஆசிரியர் தகுதித்தேர்விலும் ஒருமுறை தேர்ச்சி என்ற முறையைக் கொண்டு வர வேண்டும்"   என வாதிடப்பட்டது.ஆனால், அரசு தரப்பில் "ஏற்கெனவே1,500 ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுத காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் இந்த தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது. அதேபோல கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை அரசும், கேள்வித்தாளை வடிவமைத்த நிபுணர்களும் தான் நிர்ணயம் செய்ய முடியும். விண்ணப்பதாரர்கள் அதை தீர்மானிக்க முடியாது" என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

1 comment:

  1. கல்வி அமைச்சருக்கு என்ன தகுதி?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி