பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவை தருவது அரசின் கடமை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2019

பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவை தருவது அரசின் கடமை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவுகளை நொண்டிச் சாக்கு கூறி மறுக்காமல் கண்டிப்பாக திருப்பி வழங்க வேண்டியது அரசின் கடமை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சுகாதார நிதித் திட்டத்தின்கீழ் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கட்டாய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவச் செலவுகளை தமிழக அரசும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமும் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அரசு ஊழியர்கள் மற்றும்அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காகவும்ஓய்வூதியதாரர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடம் கட்டாய பிரிமீயம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளும்போது செலவு செய்த மருத்துவ செலவுகளை திருப்பிக்கேட்டால், பட்டியலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. நோய் பாதிப்பு இவ்வளவு சதவீதம் இருந்தால் செலவுத் தொகையை திருப்பிக் கோரமுடியாது. பட்டியலில் இல்லாத இந்த நோய் பாதிப்புக்கு காப்பீடு கிடையாது. சரியான நேரத்தில் இழப்பீடு கோரவில்லை என நொண்டிச்சாக்குகளைக் கூறி மாவட்ட அளவில் உள்ள மருத்துவ காப்பீட்டுக் குழு செலவு செய்துள்ள தொகையை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே நாங்கள் மருத்துவத்துக்காக செலவு செய்து உள்ள தொகையை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவுகளை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதை நொண்டிச்சாக்கு கூறி மறுக்கக்கூடாது. எனவே, தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின்கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மருத்துவத்துக்காக செலவு செய்துள்ள தொகையை வழங்க முடியாது என பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய செலவுத் தொகையை 6 % வட்டியுடன் வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசுமருத்துவமனைகளையும் தரம் உயர்த்தியிருந்தால் அனைத்து தரப்பினரும் அரசு மருத்துவமனைகளிலேயே இலவச சிகிச்சை பெற்றிருப்பர்.

ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை தற்போது தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை உள்ளது.எனவே, அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சட்டப்படி வழங்க வேண்டிய நிதியுதவிகளை அரசும் காப்பீட்டு நிறுவனங்களும் கண்டிப்பாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி