பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2019

பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு!


பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. மறுபுறம் வெயிலுடன், தண்ணீர் தட்டுப்பாடும் வாட்டுவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள், பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, 14 ஆண்டுகளுக்கு பின்னர் பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. முதல்கட்டமாக 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் நடப்பு ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து கடந்த 3-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பள்ளிகள் திறந்து 15 நாட்களாகியும் இன்னும் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதுகுறித்து, அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறும்போது, ‘‘புதிய பாடத்திட்ட மாற்றம் வரவேற்கக்கூடியது. எனினும், அரசு முறையாக திட்டமிடாததால் 60 சதவீத அரசுப்பள்ளிகளுக்கு இன்னும் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

குறிப்பாக 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு ஒரு சில புத்தகங்களே வந்துள்ளன. இதனால் பல பள்ளிகளில் புத்தகங்களை நகல் எடுத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டமும் கடினமாக இருப்பதால் மாணவர்கள் பாடங்களை புரிந்துகொள்ள பெரிதும் சிரமப்படுகின்றனர்.இதேபோல், கடந்த ஆண்டும் பிளஸ் 1 வகுப்பில் முக்கிய பாடப்புத்தகங்கள் காலாண்டு வரை தரப்படவில்லை. அதன் விளைவு பொதுத்தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நடப்பு ஆண்டும்அதே தவறை கல்வித்துறை மீண்டும் செய்வது ஏற்புடையதல்ல. எனவே, புதிய பாடப்புத்தகங்களை விரைவாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியது: பாடத்திட்ட மாற்றத்தை 3 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி முதல்கட்டமாக கடந்த ஆண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. அதன்பின் நடப்பு கல்வியாண்டில் (2019-20) 2, 7, 10, 12-ம் வகுப்புகளுக்கும் அடுத்த ஆண்டில் (2020-21) 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்.ஆனால், முன்கூட்டியே பணிகள் முடிந்துவிட்டதால் எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய அனைத்து வகுப்புகளுக்கு நடப்பாண்டு பாடத்திட்டத்தை மாற்ற போவதாக திடீரென அறிவித்து அதை அமல்படுத்தியது. இங்குதான் சிக்கல் உருவானது. ஏனெனில், பாடத்திட்ட பணிகள் இறுதிக்கட்ட நிலையில் இருந்த போதுதான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, அச்சிடுதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால் 3, 4, 5, 8-ம் வகுப்புக்கான புத்தகங்கள் முழுமையாக பள்ளிகளுக்கு வந்துசேரவில்லை. சில பள்ளிகளுக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன.

புத்தக சுமை அதிகரிப்பு இதே போல், இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்புக்கு முப்பருவ பாட முறையை ரத்து செய்துவிட்டு ஒரே பாடப்புத்தகமுறையை அரசு அறிமுகப்படுத்தியது. அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களும் சரியாகக் கிடைக்கவில்லை. மேலும் ஒரே பாடப் புத்தகங்கள் என்பதால் அவற்றின் எடை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. ஏற்கெனவே உள்ள நோட்டுப் புத்தகங்களுடன் இவற்றையும் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்லும் அவலத்துக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர்.மேலும், 6-ம் வகுப்பு சமூக அறிவியல், 7-ம் வகுப்பு அறிவியல் (ஆங்கில மீடியம்) புத்தகங்களும் வழங்கப்படவில்லை. எல்லா புத்தகங்களும் இணையதளத்தில் உள்ளன. நகல் எடுத்து வகுப்புகளை நடத்துங்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அதேநேரம் இணையதளத்திலும் புத்தகங்கள் பதிவேற்றப்படவில்லை.

மாணவர்கள் கையில் புத்தகங்கள் இல்லாமல் பாடம் நடத்துவதில் பலனில்லை. வசதியான மாணவர்கள் பிரிண்ட் எடுத்து படிக்கலாம். வசதியற்றவர்கள் நிலை குறித்து சிந்திக்க வேண்டும்.இதனால் பள்ளிகள் திறந்தாலும் பெரிதாக ஒரு பயனும் இல்லை. அரசின் முறையான திட்டமிடல் இல்லாததால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுதவிர தண்ணீர் தட்டுப்பாடும் மிரட்டுகிறது. வீடுகளில் இருந்து மாணவர்களை குடிநீர் எடுத்து வர சொல்லி விடுகிறோம். ஆனால், கழிப்பறை உட்பட இதர தேவைகளுக்கான தண்ணீருக்கு சிக்கல் நிலவுகிறது.குறிப்பாக வட மாவட்ட பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

பல பள்ளிகளில் கழிப்பறைகளை பூட்டி வைப்பதால் மாணவர்கள் திறந்தவெளிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி தண்ணீர் பிரச்சினையை சரி செய்து கொள்ள அரசுகூறுகிறது.ஆனால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் போதுமான நிதி இல்லை. தண்ணீர் பிரச்சினையால்கல்விப்பணியும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வெயில் தாக்கமும் அதிகமாக இருப்பதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. Second year Pg or bed waiting for results candidates call to me sir 9600640918

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி