10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம்: முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2019

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம்: முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு


பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்  வகையில் சென்னை எழிலகத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் தொடங்கினர்.

இதையடுத்து 16ம் தேதிமுதல்வரை சந்தித்து பேச உள்ளனர்.ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஆண்டு தொடர்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஊழியர்கள், ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் மீது அரசு துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்தது. அதில் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பலர் மீது 17பி என்னும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் சிலர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அதன் தொடக்கமாக சென்னையில் எழிலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். அறிவித்தபடி நேற்று காலை 10 மணி அளவில் உண்ணாவிரதம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத நிகழ்வில் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில உயர்மட்டக் குழுவில் அங்கம்் வகிக்கும் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், மற்றும் ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என  சுமார் ஆயிரம் பேர் இந்த உண்ணாவிரத நிகழ்வில் பங்கேற்றனர்.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணா விரதம் மாலை 5 மணிவரை நடந்தது. இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக நாங்கள்போராட்டம் நடத்தி வருகிறோம். அரசு எங்களை அழைத்து பேச மறுக்கிறது. பழைய ஓய்வு ஊதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் குறித்து முதல்வர் எங்களை அழைத்து பேசி அவற்றை நிறைவேற்ற வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்க தொடரப்பட்ட புனை வழக்குகளை, பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். மறுக்கப்படும் பதவி உயர்வை வழங்க வேண்டும்.

மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் பழிவாங்கும் நடவடிக்கையாகதற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள்ரத்து செய்யப்பட வேண்டும். கல்லூரிப் பேராசிரியர்கள் தொலை தூரத்துக்கு மாற்றப்பட்டதை திரும்பப் பெற்று அவர்கள் முன்பு பணியாற்றிய கல்லூரிகளில் பணியமர்த்த வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஓய்வு பெற்றோருக்கு மறுக்கப்பட்ட ஓய்வு ஊதியப் பயன்களை உடன வழங்க வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினரும் தலைமை  ஆசிரியருமான ரவிச்சந்திரனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும். இந்த கோரிக்கை மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 16ம் தேதி, சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேச ஜாக்டோ-ஜியோ முடிவெடுத்துள்ளது. அதற்கான அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம்.

முதல்வர் அதற்கும் இசைவு தெரிவித்து கோரிக்கையை நிறைவேற்ற முன் வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி நடக்காத நிலையில், ஜாக்டோ-ஜியோ அடுத்தகட்ட முடிவை 16ம் தேதி அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்க தொடரப்பட்ட புனை வழக்குகளை, பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி