தமிழகம் முழுவதிலும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2019

தமிழகம் முழுவதிலும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம்


தமிழக அரசுப்பள்ளிகளில் 10 ஆயிரம் உபரி பட்டதாரி ஆசிரியர்களை, இடைநிலை ஆசிரியர்களாக பணி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அரசுப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் என்ற நிலை நீடித்து வருகிறது. எனவே, உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களை பணி நிரவல் மூலம் வேறுபள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதற்காக உபரி ஆசிரியர்கள் தொடர்பான கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது.இதில் 16 ஆயிரத்து 110 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிய வந்தது. இவர்களை வேறு பள்ளிகளுக்கு கவுன்சலிங் மூலம் பணிநிரவல் செய்வதற்கான முறையான அரசின் உத்தரவு கடந்த மாதம் 20ம் தேதி முடிவானது. இவர்களில் 14 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 4 ஆயிரம் பேர் வரை பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யவும், மற்றவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, கல்வித்துறையில் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளைவலியுறுத்தி வருகிறது. அதற்கேற்ப, குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே பள்ளியாக மாற்றுவது, இதன் மூலம் உருவாகும் உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் 15க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் மாநிலத்தில் தொடக்கக்கல்வி நிலையில் 2,008 இடைநிலை ஆசிரியர்களும், 271 பட்டதாரி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையில் 208 முதுநிலை ஆசிரியர்களும், 13 ஆயிரத்து 625 பட்டதாரி ஆசிரியர்களும் உபரியாக உள்ளனர். ஏற்கனவே 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி ைமயங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உபரியாக உள்ளபட்டதாரி ஆசிரியர்களில் 3 ஆயிரத்து 625 பேரை பணிநிரவல் செய்தாலும், மீதமுள்ள 10 ஆயிரம் பேரை இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான அனுமதியை தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்திடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு பணியிறக்கம் செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறைவிளக்கம் அளித்தாலும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு அழுத்தம் கொடுப்பது வேதனைக்குரியது என அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பி.சேகர் கூறியதாவது: 'உபரி ஆசிரியர் பணியிடங்கள் என்று இவர்கள் கணக்கு காட்டுவதே தவறு. கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு 65 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

அதேபோல் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் மீடியம், தமிழ் மீடியம் என்று இருந்தால் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 2 பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். தவிர இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுக்கான மனநல பயிற்சியை பெற்று வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட் படிப்பில் வயது வந்தோருக்கான மனநலம் தொடர்பாக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த விகிதாச்சாரத்தை கடைபிடிக்காமல் எப்படி தமிழகத்தின் கல்வித்தரம் உயரும். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும் என்றால் தரம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

 இதை தவிர்த்துவிட்டு வேண்டும் என்றே எங்களை பழிதீர்க்க வேண்டும் என்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியர்களாக நிலை இறக்க முயற்சிப்பது என்ன நியாயம்?எனவே, அரசு உபரி ஆசிரியர்கள் என்ற பெயரில் பட்டியலை தயாரித்த உடனே நாங்கள் கடந்த 7ம் தேதிஎங்கள் நிலையை விளக்க மாநில நிர்வாகிகள் மட்டும் எழிலகம் அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். அப்போது வரும் 16ம் தேதி (இன்று)முதல்வரை சந்திப்பது என்று தீர்மானித்தோம். இதையறிந்த அரசு, எங்களிடம் சட்டமன்றம் நடந்து கொண்டிருப்பதால் கூட்டத்தொடர் முடிந்த பிறகு சந்திக்கலாம் என்று தெரிவித்தது. ஆனாலும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த 20 பேர் முதல்வரை செவ்வாய்கிழமை(இன்று) திட்டமிட்டபடி சந்திப்பது என்று முடிவு செய்துள்ளோம்' என்றார்.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2 லட்சத்து 60ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கணக்கெடுப்பில் 16 ஆயிரத்து 110 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரியவந்தது. இவர்களில் 14 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். இவர்களில் 4 ஆயிரம் பேர்வரை பணி நிரவல் மூலம் பணி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 ஆயிரம் பேரை இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

2 comments:

  1. Den y dey r conducting d tet 1 & DTED....Adhukku bed ye Elam padikkalame....2013 certificate indha 1 yr mattum dhan....no one is talking about dis

    ReplyDelete
  2. Sec grade anganvadi anuppum pothu no vacant in sec grade sonnanga but ippo BT teachers sec grade panna vacant enga irundhu vandhadhu.paavam enna nadaludhunne theriyala...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி