தமிழகத்திற்கே வழிகாட்டும் நாகை மாவட்ட மாணவரணி சார்பில் கொண்டாடப்படும் கோலாகல ஏழாம் ஆண்டு ஆசிரியர் நாள் விழா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2019

தமிழகத்திற்கே வழிகாட்டும் நாகை மாவட்ட மாணவரணி சார்பில் கொண்டாடப்படும் கோலாகல ஏழாம் ஆண்டு ஆசிரியர் நாள் விழா!



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாகை மண்டல மாணவரணி சார்பில் 07.09.2019 அன்று மாலை 6 மணியளவில் மயிலாடுதுறையில் ஜெயின் சங்க அரங்கில் கட்சியின் எந்தவொரு அடையாளமும் கொடியும் தோரணமும் இல்லாமல் பொதுவிழாவாகக் கோலாகலமாக நடைபெறும் ஆசிரியர் நாள் விழாவினைத் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்து வரும் நல்லாசிரியர் பெருமக்களைத் தேர்வு செய்து ஆசிரியச் செம்மல் விருது, சான்றிதழ், சால்வை,சந்தனமாலை மற்றும் புத்தகப் பரிசுகள் ஆகியவற்றை மாநில மகளிரணிச் செயலாளர் மருத்துவர் ரொஹையா மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அழகு சுந்தரம் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்து வரும் நிகழ்வு மாநிலத்திலேயே ஒரு முன்மாதிரி நிகழ்வாகும். 
சீரும் சிறப்பும் மிக்க இவ்விழாவில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காவிரிப்பூம்பட்டிணம் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அண்மையில் மாநில நல்லாசிரியர் விருதாளர் திரு க.அன்பழகன், வடக்குப் பொய்கைநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு ஆறு. துரைக்கண்ணன், கோமல் அரசினர் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் திரு. ச.செந்தில்குமார் மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வடகரை அரசு உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் JRC ஆலோசகருமான திருமதி சு.நளாயினி, திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தேசிங்குராஜபுரம் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியை திருமதி இரா. விஜயலெட்சுமி, கோட்டூர் ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியை திருமதி வி.விஜயலெட்சுமி ஆகியோர் இந்த ஆண்டுக்கான ஆசிரியச் செம்மல் விருதுகளைப் பெற்றனர்.
தமிழகத்தில் அறியப்படும் ஆகப் பெரும் கட்சிகள் கூட ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துச் செய்தி அறிக்கை விடுவதோடு சரி. மற்றபடி மாவட்டம்தோறும் கல்விப்பணியில் தலைசிறந்து விளங்கும் கட்சி சார்பற்று விளங்கும் பொதுவான ஆசிரியர் பெருமக்களை அழைத்து மரியாதை செய்யும் நிகழ்வுகள் நடைபெறுவதாகத் தெரியவில்லை. ஆதலாலேயே இந்த நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், மாநிலத்திற்கே வழிகாட்டுகிறது. இதற்கு பல வகையிலும் பேருதவிகள் புரிந்து வரும் கழகத் தோழர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியான நிகழ்வைச் சிரமம் பார்க்காமல் மகிழ்ச்சியோடு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மாநில மாணவரணித் துணைச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி அவர்களுக்கும் விருது பெற்ற ஆசிரியர்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன. 
நிகழ்ச்சியில் ஏவிசி கல்லூரி மேனாள் துணை முதல்வர் முனைவர் துரை.குணசேகரன், சமூக செயற்பாட்டாளர் முனைவர் மணி கணேசன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் த.இராயர், குடந்தை அரிமா சங்கத் தலைவர் மருதையன், கம்பர் கழகத் தலைவர் பாவலர் முத்து ஜானகிராமன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் ஜெனிபர் ச.பவுல்ராஜ், திருக்குறள் பேரவை பாவலர் சிவ.கோபாலகிருஷ்ணன், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாரி.பன்னீீர்செல்வம், குயில்தோப்பு அறிவியக்கம் பாவலர் செ.மலர்மன்னன் முதலானோர் வாழ்த்துரை வழங்கினர்.
வீதி முழுவதும் விருது பெறும் ஆசிரியர்களைப் பதாகைகள் மூலமாக நட்டுவைத்து வரவேற்றதும் விழா முடிவில் அனைவருக்கும் உணவு உபசரிப்பு செய்ததும் விருதாளர்களுக்கு நெகிழ்ச்சியைத் தந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி