Flash News : 10 ஆம் வகுப்பிற்கு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு ஒரேதாள் தேர்வு முறை - அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2019

Flash News : 10 ஆம் வகுப்பிற்கு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு ஒரேதாள் தேர்வு முறை - அரசாணை வெளியீடு.

GO NO 161 , DATE : 13.09.2019

இனி வரும் காலங்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழி மற்றும் ஆங்கிலப் பாடங்களில் இரண்டு தாள் தேர்வு முறைக்குப் பதிலாக ஒரே தாள் தேர்வு முறைப் பின்பற்றப்படும் அதற்கான அரசாணை இன்று  வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு நிகழாண்டு முதல் ஒரே தாள் தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்துக்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அரசுத் தேர்வு இயக்குநரால் நடத்தப்படும் பிளஸ் 1,  பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில்,  மொழிப்பாடம் (Language) மற்றும் ஆங்கிலப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை இரண்டு தேர்வுகளாக எழுதுவதற்குப் பதிலாக ஒரே தேர்வாக எழுத அனுமதித்து ஆணையிடப்பட்டது. 

இதன் அடிப்படையில் தற்போது அரசுத் தேர்வுகள் இயக்குநர்,  பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கும் மொழிப் பாடங்கள் மற்றும் ஆங்கிலப் பாடத்துக்கு இரண்டு தாள்களாக நடத்துவதை மாற்றி ஒரே தாளாக தேர்வுகள் நடத்திட வேண்டி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் முறையிட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,  மேற்கண்டவாறு பத்தாம் வகுப்பு மொழிப்பாடம்,  ஆங்கிலப் பாடங்களில் இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி அமைப்பதால் பின்வரும் பயன்கள் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அதன் விவரம்:

மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வின்போதும் அதிக நாள்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக செலவிடும் நிலை மாறி கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணியில் அதிக நேரம் செலவிட ஏதுவாகும்.  இந்தப் பாடங்களை ஒரே தாளாக தேர்வு எழுதுவதன் காரணமாக மாணவர்களின் தேர்வு காலம் குறைக்கப்படுவதால் அவர்களின் கவனச் சிதறல் மற்றும் மனஅழுத்தம் பெருமளவில் குறையும். 

மூன்று கோடி தாள்கள் சேமிக்கப்படும்:  விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நடைபெறும் நாள்கள் குறைவதால் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்க வாய்ப்பு ஏற்படும்.
ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் பத்து லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.  மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ஒரே தாளாக தேர்வு நடத்துவதால்,  சுமார் இருபது லட்சம் விடைத்தாள்கள் குறையும். இதனால் அரசு மைய அச்சகத்தில் அச்சிடுவதற்காக ஓர் ஆண்டுக்கு பயன்படுத்தப்படும் சுமார் மூன்று கோடி எண்ணிக்கையிலான தாள்களும் சேமிக்கப்படும்.

அரசு தேர்வுகள் இயக்குநர் கருத்துருவினை ஏற்று,  ஆசிரியர் சங்கங்கள்,  பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும்,  கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மொழிப்பாடம்,  ஆங்கிலப் பாடத் தேர்வுகளில் இரு தாள்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பதிலாக 2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்துவதற்கும் அவ்வாறு நடத்தும்போது, பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும் முதல் மற்றும் இரண்டாம் தாள்களில் உள்ள அனைத்து பாடங்களின் சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளார்.



1 comment:

  1. Ok, but 6 to 12 STD one markku OMR sheet kondu varalam . Public exam conducted 8,10,11,12 STD one mark write Panna OMR sheet method kondu varalam .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி