பள்ளி கழிவறைகளை கட்டமைப்பு பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2019

பள்ளி கழிவறைகளை கட்டமைப்பு பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு


பள்ளியில் மாணவிகளுக்கான கழிவறைகள் கட்டியது தொடர்பான பிரச்னையில் கட்டிடத்தை ஆய்வு செய்ய கட்டமைப்பு பொறியாளரை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள சர்ச் பார்க் கான்வென்ட் வளாகத்தில் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக கழிவறைகள் கட்ட பள்ளி நிர்வாகம் முடிவு செய்து மைலாப்பூரில் உள்ள ஜூட் இன்பிராடெக் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தின்படி வரிகள் உள்பட 1 கோடியே 43 லட்சத்து 39,537 கட்டுமான பணிக்கு பள்ளி நிர்வாகம் தரவேண்டும். இதில் 1 கோடியை பள்ளி நிர்வாகம் முன்பணமாக கடந்த 2017 அக்டோபரில் கொடுத்தது. ஆனால் கட்டுமானம் சரியில்லாதால் மீதி பணத்தை கல்வி நிறுவனம் வழங்கவில்லை.

இதையடுத்து, கட்டுமான நிறுவனம் சிவில் நீதிமன்றத்தில் பணத்தை கேட்டு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம் கட்டிடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது. வழக்கறிஞர் ஆணையர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளருடன் சென்று சம்மந்தப்பட்ட கழிவறை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், கட்டமைப்பு பொறியாளர்கள் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த அல்லது சென்னை ஐஐடியை சேர்ந்த கட்டிட கலை நிபுணரை வைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிடக்கோரி பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் என்பதால் இந்த பள்ளியின் கழிவறைகளின் கட்டுமானம், கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்து வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு பணியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளருடன், கட்டமைப்பு பொறியாளர்கள் ஆராய்ச்சி மையத்தின் கட்டமைப்பு பொறியாளரும் ஈடுபட வேண்டும். இருவரும் ஆய்வு அறிக்கையை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இருவருக்கும் இடையை ஆய்வு வேறுபாடு இருந்தால் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி