TNPSC - குரூப் 2 தேர்வில் மீண்டும் மாற்றம்: தமிழ் மொழி தாள் தகுதித்தேர்வானது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2019

TNPSC - குரூப் 2 தேர்வில் மீண்டும் மாற்றம்: தமிழ் மொழி தாள் தகுதித்தேர்வானது!

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு முறை, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. புதிதாக தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு, பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டம், செப்., 27ல் வெளியிடப்பட்டது. இரண்டு பிரிவினருக்கும், முதல் நிலை தேர்வும், முதன்மை எழுத்துத் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.

தமிழக அரசு அலுவலக பணியாளர்களுக்கு மொழி அறிவுத் திறன்,கோப்புகள் தயாரிக்கும் திறன் தேவைப்படுவதாக, அரசு செயலர்கள் மற்றும் துறை தலைவர்களிடம் இருந்து, பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வந்தன. அதன்படி, இந்த குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு, எழுத்துத் தேர்வு நடத்த முடிவானது. புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது; இதிலும், சில மாற்றங்கள் தேவை என கோரிக்கை விடுத்தனர். அதன்படி, தேர்வு திட்டத்தில், சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல் நிலை தேர்வு

முதல் நிலை தேர்வு, ஏற்கனவே அறிவித்ததில், எந்த மாற்றமும் கிடையாது. தமிழக வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக, அரசியல் இயக்கங்கள், வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள, எட்டு, ஒன்பது பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, கேள்விகள் இடம்பெறும்.தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், மாதிரி வினாத்தாள், இந்த மாத இறுதியில் வெளியாகும். தேர்வர்களுக்கு, போதிய கால அவகாசம் வழங்கப்படும்.முதன்மை எழுத்துத் தேர்வுஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த, முதன்மை எழுத்துத் தேர்வு, இரண்டு தேர்வுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, முதன்மை எழுத்துத் தேர்வின் முதல் பகுதி, தனித் தாளாகவும், தகுதித் தேர்வாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த தேர்வு, அதிகபட்சம், 100 மதிப்பெண்களுக்கு, ஒன்றரை மணி நேரம் நடக்கும். இந்த தேர்வில், குறைந்தபட்சம், 25 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தகுதி பெற முடியும். இந்த தகுதி மதிப்பெண்கள், தேர்வரின் தரவரிசை நிர்ணயத்திற்கு கணக்கில் எடுக்கப்படாது.அதேபோல், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, பட்டப் படிப்பில் இருந்து, பத்தாம் வகுப்பு தரத்துக்கு, தேர்வின் தரம் மாற்றப்பட்டுள்ளது. இதன் வழியாக, தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்த மாணவர்களால் மட்டுமே, இதில் தேர்ச்சி பெற முடியும்.

2ம் தாள் தேர்வு

பாடத்திட்டத்தின் மற்ற பகுதிகள் அனைத்தும், இரண்டாவது தாளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்வு, 300 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் நடக்கும்.இதில் பெறும் மதிப்பெண்களே, தரவரிசைக்கு கணக்கில் எடுக்கப்படும்.

முதல் நிலை தேர்விலும், முதன்மை எழுத்து தேர்விலும், தேர்வர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்றால்,தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி, தற்போது வரை, தமிழ் மொழி மற்றும் இலக்கியம் அறிந்திருக்க வேண்டும். தமிழகத்தின் கலை மரபுகள், சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை, நன்கு அறிந்திருக்க வேண்டும்.எனவே, தமிழக மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி