முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி உத்தரவுகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2019

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி உத்தரவுகள்!


சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்குவதற்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறுகையில்,* பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, மாணவர்களின் வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட பொருட்கள், மின்னணு சாதனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் முடக்கி வைத்திருப்பது ஏன்? கல்வி அலுவலர்கள், தங்களது பணியை ஒழுங்காக செய்தாலே, தமிழகம் பள்ளிக்கல்வியில் முதலிடத்துக்கு வந்துவிடும்.

கல்வி அலுவலர்களின் பணியைக் கண்காணிக்கவே ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க, முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கும் விரைவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

5 ஆண்டுகளுக்கு முன், தொடப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்பதைத் தயார் செய்ய வேண்டும். 5 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். பட்டியல் தயாரிப்பதில், முதன்மைக்கல்வி அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும்.

மாணவர்களின் கற்றல் திறனைப் பொறுத்தவரை தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டில் முதலிடத்துக்கு வருவதற்கான முயற்சிகளை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை திட்டப்பணிகள் அனைத்தும் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது.

அரசின் திட்டப்பணிகள் சரியாக அனைத்துப்பள்ளிகளுக்கும் சென்றடைந்துள்ளதா என்பதை பள்ளிக்கல்வி செயலாளரும், ஆணையரும் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் இலவச புத்தகங்கள், சீருடைகள் சரியாக கிடைத்துள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் தேங்கியுள்ள பழைய பாடப்புத்தகங்களை தமிழ்நாடு காகிதம் மற்றும் செய்தித்தாள் நிறுவனத்துக்கு ( TNPL ) அனுப்பி வைக்க வேண்டும்.

இருக்கைகள், மேசைகள் சேதமடைந்தால், அவற்றை சரிசெய்து மீண்டும் உபயோகத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் ரூ.20 கோடிக்கான கட்டமைப்பு செலவினங்கள் அரசுக்கு மிச்சமாகும். மேலும் பள்ளிகளில் பராமரிப்பில்லாத கட்டிடங்களை இடிக்கவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளது. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை முதன்மைக்கல்வி அலுவலர்கள் அழைத்து அடிக்கடி ஆலோசிக்க வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் படித்து நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு கடிதம் எழுதி, பள்ளிகளுக்கு உதவுமாறு மாணவர்களுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு, முன்னாள் மாணவர்கள் உதவினால், அரசுப்பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

அரசு செலவில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பள்ளிகளுக்கு வாங்கி அனுப்பப்பட்டுள்ளன. அரசுப்பள்ளிகளில் கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், ஆசிரியைகளின் சேலையைக் கொண்டு மின்னணு சாதனங்களை மூடி வைத்துள்ளனர். இதுபோல் 2,000 கணினிகள் அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதில் எதை பயன்படுத்த முடியுமோ, அவற்றை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ 2,400 கோடி செலவில் குக்கிராமங்களில் கூட இணைய வசதி கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்துறை சார்பில் 2020 ஜனவரி முதல் பிப்ரவரிக்குள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் CCTV சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் CCTV பொருத்தப்பட்டுள்ளதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,* ரூ.26.40 கோடி செலவில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இசை, ஓவியம், நடனப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், இசை, ஓவியம் மற்றும் நடனப்பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் Skill Training பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 500 ஆடிட்டர்கள் மூலம் பட்டயக்கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும்.

ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வின் போது, விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்காததால், தரையில் விழுந்து புரண்ட ஆசிரியரின் செயல் ஒழுக்கத்துக்கு மாறானது. எனவே முதற்கட்டமாக 17- பி பிரிவின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என திண்டுக்கல் மாவட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் குறித்து அமைச்சர் விளக்கம்.

அதேபோல் 5-க்கும் குறைவாக மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள். இதற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசுக்கு செலவாகிறது. இதன் காரணமாக, 5 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுத்து, அவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம், கணிதப்பாடங்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாளை தேர்வுத்துறை தயாரித்து அனுப்பும். முதல் 3 ஆண்டுகளுக்கு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும். 5-ம் வகுப்புக்கு 3 பாடங்களுக்கும், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்களுக்கும் பொதுத்தேர்வு அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் எனவும் கூறினார்.

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

முன்னாள் மாணவர்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் அரசுப்பள்ளிகளுக்கு நிதி வழங்கலாம். வெளிநாடுகளில் வசிப்போர் நிதி வழங்குவதுடன், அவர்கள் வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு நபரையும் நியமிக்கலாம். இதுவரை, தனியார் நிறுவனங்கள் மூலம் ரூ.128 கோடி அரசுப்பள்ளிகளுக்கு நிதியாக வந்துள்ளது.

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; 5-ம் வகுப்புக்கு 3 பாடங்கள், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்கள் என்கிற விதத்தில் நடக்கவுள்ள பொதுத்தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் ஒரு மாதத்துக்கு குறைந்தது 20 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர் 30 பள்ளிகளையும், வட்டாரக்கல்வி அலுவலர் 60 பள்ளிகளையும் ஒரு மாதத்துக்கு ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.

2 comments:

  1. Please sir order to all female teachers wear kurthas with coat uniform

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியைகளின் சேலையைக் கொண்டு மின்னணு சாதனங்களை மூடி வைத்துள்ளனர்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி