அடிப்படை ஊதியம் வழங்குக - பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

அடிப்படை ஊதியம் வழங்குக - பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!


ரூ.7700 சம்பளம், 8 வருடங்களுக்குமுன் ஜெயலலிதா நியமித்த பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.

இது குறித்து தமிழ்நாடுஅனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி  போன்ற கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு 2011-2012 கல்விஆண்டில்  ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டோம். 

 

ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட எங்களுக்கு ஊதிய உயர்வு கடந்த 8 கல்வி ஆண்டுகளில் முதல்முறையாக 2014ல் ரூ.2ஆயிரமும், பின்னர் 2017ல் ரூ.700ம் உயர்த்தி ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியமாக தரப்படுகிறது. 16549 பணியிடங்களில் மரணம், பணிஓய்வு என 4ஆயிரத்துக்கும் மேலான காலியிடங்கள் ஏற்பட்டு தற்போது 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றோம்.

பணியில் சேர்ந்து பின்னர் இறந்து போன ஆசிரியர்கள் குடும்பத்திற்கும், 58 வயதால் பணிமூப்பு பணிஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் தமிழகஅரசு சார்பில் குடும்பநலநிதி ரூ.3லட்சம் வழங்க வேண்டுகிறோம்.

 

26.08.2011ல் தமிழக சட்டமன்றத்தில் முதல்வரின் 110விதியின்கீழ் நிதிஒதுக்கீடு செய்தபடி மே மாதத்திற்கும் சம்பளம் தரவேண்டும். இதனை கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் கடந்த 8 கல்விஆண்டுகளாக மே மாதங்களுக்கு ஊதியம் தராமல் மறுக்கப்பட்டு வருவதால் ஒவ்வொருவரும் ரூ.53ஆயிரத்து 400 இழந்து சிரமப்பட்டு வருகிறோம். சம்பள உயர்வும் கடந்த 2 ஆண்டுகளாக உயர்த்திக் கொடுக்கவில்லை. இதனுடன் 7வது ஊதியக்குழு 30 சதவீத உயர்வை கொடுக்கவில்லை. பள்ளிக்கு சென்றுவரவே இக்குறைந்த சம்பளத்தில் பாதித்தொகை செலவிட நேரிடுகிறது. போக்குவரத்துச் செலவுகளை தவிர்க்க அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கி விரும்பும் பள்ளிகளில் பணியமர்த்த வேண்டுகிறோம்.  குடும்ப செலவுகளை கடன்வாங்கி செய்கிறோம். விலைவாசி உயர்வை எங்களால் சமாளிக்க முடியவில்லை. அரசாணை 177ன்படி கூடுதலாக பள்ளிகளில் பணிவழங்கி இருந்தால் ஒவ்வொருவருக்கும் ரூ.15ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம்வரை சம்பளம் கிடைத்து குடும்பநிதிச்சுமை குறைந்திருக்கும். இதையும் அரசு நடைமுறைப் படுத்தவில்லை. மேலும் ஆந்திரா மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கு தரப்படும் ரூ.14ஆயிரத்து 203 தொகுப்பூதியம், மகளிருக்கு மகப்பேறுகால விடுப்பு, இபிஎப், கர்நாடக மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் இஎஸ்ஐ போன்றவற்றை வலியுறுத்தி கேட்டும் தமிழகஅரசு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர் பணி, அரசுப்பணி என நம்பிவந்த எங்களுக்கு பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே வாழ்வாதாரம் கிடைக்கும். பணிநிரந்தரம் செய்ய காலதாமதம் ஆகுமெனில் அதுவரை மத்தியஅரசின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18ஆயிரம் வழங்க வேண்டுகிறோம்.

 

கடந்த 2017ம் ஆண்டு ஜீன், ஜீலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில்  மாண்புமிகு பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தர செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என அறிவித்து இருந்தார். மேலும் பணிநிரந்தரம் செய்ய 3 மாதத்திற்குள் கமிட்டி அமைக்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார். அனைவருக்கும் அருகில் உள்ள பள்ளிகளில் விருப்ப மாறுதல் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்து இருந்தார். ஆனால் 2 ஆண்டுகள் கடந்த நிலையில் சட்டசபை அறிவிப்பை நிறைவேற்றாமல் தற்போது மறுத்துவருவது பணிநிரந்தரத்தை நம்பிஇருந்த எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் கேட்கும்போது மத்தியஅரசு போதுமான நிதியை தரவில்லை என எங்களின் கோரிக்கையை நிராகரிப்பது மனிதநேயமல்ல. இதனை மறுபரிசீலனை செய்து சட்டசபை அறிவிப்பை நிறைவேற்றிட வேண்டுகிறோம்.

ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் கேட்டு பாரதப்பிரதமர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கும் கடிதம் எழுதி உள்ளோம். எனவே தமிழகஅரசு எங்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டுகிறோம்.

  மத்தியஅரசு மனிதவள மேம்பாட்டுதுறை (MHRD) மாணவர்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வியை மேம்படுத்த (RTE) அனைவருக்கும் கல்வி இயக்கம் (தற்போது ஒருங்கிணைந்த கல்வி/SAMAGRA SHIKSHA) திட்டவேலையில் எங்களை தமிழகஅரசு ஈடுபடுத்தி உள்ளது. மாணவர்கள் கல்வி நலனுக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் நலனும் மேம்பட அரசு புதிய கொள்கையினை வகுத்து திட்டமிட வேண்டுகிறோம்.

9 கல்விஆண்டுகளாக ரூ.7700 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்து அனைவரின் குடும்பநலன் மற்றும் வாழ்வாதாரத்தினை காக்க மனிதநேயத்துடன் தமிழகஅரசுப் பணிக்கு மாற்றி உதவிட வேண்டுகிறோம்.

 

ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களின்போது ( 2014, 2015, 2016, 2017, 2018, 2019)   அரசின் உத்தரவின்படி பள்ளிகளை திறந்து முழுநேரமாக பகுதிநேர ஆசிரியர்களே நடத்தி வருகிறோம். மேலும் பள்ளிப்பணிகளில் எல்லா வகையிலும் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகிறோம். பள்ளி நடத்தும் அனுபவமும் மற்றும் நிரந்தரப்பணிக்கு அரசு கேட்கும் கல்வித்தகுதியுடன் நாங்கள் பணியாற்றி வரும்போது உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் மற்றும் கணினிஅறிவியல் பாடங்களில் இந்த 9 கல்விஆண்டுகளாக நாங்கள் மாணவர்களுக்கு பயிற்சிஅளித்து வரும்போது இக்காலிப்பணியிடங்களில் எங்களை நியமிக்காமல், இப்பாடப்பிரிவுகளில் 1325 சிறப்பாசிரியர்கள் TRB மூலம் தேர்வு நடத்தி பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இத்தேர்விலும் முன்னுரிமைகூட கொடுக்கவில்லை. அதைப்போலவே கணினி பாடத்திலும் 814 கணினி பயிற்றுநர்கள் TRB மூலம் தேர்வு நடத்தி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த காலிப்பணியிடங்களை TRB மூலம் நிரப்பிய பிறகு 9 கல்விஆண்டுகளாக இதே பாடங்களில் பணியாற்றும் எங்களின் நிலை குறித்து அரசு சிறப்பு கவனம் செலுத்தி எங்களுக்கென தனியே TRB மூலம் சிறப்பு தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களாக சம்பள உயர்வுடன் அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரம் வேலையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டுகிறோம்.

இவண்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடுஅனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல்  : 9487257203

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி